

ஹைதராபாத்: சுதந்திரப் போராட்ட காலத்தில், ஹைதராபாத் நகரில் நடந்த, வரலாற்று நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ள படம், ‘ரஸாக்கர்’. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி தயாரித்துள்ளார். யதா சத்யநாராயணா இயக்கியுள்ள இந்தப் படத்தில், பாபி சிம்ஹா, வேதிகா, அனுஷா, ஜான் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி பேசும்போது, “இப்போதைய ஹைதராபாத் 1948-ல் இந்தியாவில் சேர்க்கப்படும் முன், நிஜாம் மன்னரால் துர்க்கிஸ்தானாக மாற்றப்படுவதாக இருந்தது. இந்திய அரசால் அது தடுக்கப்பட்டது. எங்கள் வம்சத்தில், என் தாத்தா அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்தார். இந்தக்கதை ஹைதராபாத் மக்கள் மீது அப்போது கட்டவிழ்த்து விடப்பட்ட வெறியாட்டத்தை, அதிலிருந்து ஹைதராபாத் மீண்டு வந்ததை பதிவு செய்யும்.” என்றார்.
இயக்குநர் யதா சத்யநாராயணா பேசும்போது, “சுதந்திரம் கிடைத்த போது, ஹைதராபாத்தில், நிஜாமுக்கு எதிராக மக்கள் போராடி கொண்டிருந்தார்கள். நிஜாம் மன்னரால் இந்து மக்கள் துன்புறுத்தப்பட்டனர். அதைத்தான் இதில் சொல்ல முயன்றுள்ளோம்” என்றார்.