‘பிரேமலு’ முதல் ‘பிரமயுகம்’ வரை- வசூலில் ‘மாஸ்’ காட்டும் மலையாள படங்கள்

‘பிரேமலு’ முதல் ‘பிரமயுகம்’ வரை- வசூலில் ‘மாஸ்’ காட்டும் மலையாள படங்கள்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: இந்த ஆண்டு வெளியாகியுள்ள மலையாள படங்கள், பாக்ஸ் ஆஃபீஸில் பரவலான நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மலையாள ரசிகர்களைத் தாண்டி மற்ற மொழி ரசிகர்களின் விருப்பத் தேர்வாக இப்படங்கள் உள்ளன.

வெறும் ரூ.3 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த நம்பிக்கையை சாத்தியப்படுத்தியுள்ளது ‘பிரேமலு’. ‘தண்ணீர்மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இயக்கத்தில் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜூ முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நகைச்சுவைக் கலந்த காதலை மையமாக கொண்டு உருவான ‘பிரேமலு’ படம் வெளியாகி 11 நாட்களில் ரூ.46 கோடியை வசூலித்துள்ளது. விரைவில் ரூ.50 கோடியை எட்ட உள்ளது. மலையாளம் தாண்டி, தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதேபோல, மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ படம் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. 5 நாட்களில் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வருகிறது. ப்ளாக் அன் வொயிட் திரையனுபவத்துடன் கடந்த 15-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ‘பூதகாலம்’ படம் மூலம் கவனம் பெற்ற ராகுல் சதாசிவம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இது தவிர, டோவினோ தாமஸின் ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ (Anweshippin Kandethum) படம் பிப்,9-ம் தேதி வெளியானது. ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.20 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியான ஜெயராமின் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.40 கோடி வசூலை குவித்துள்ளது. மேற்கண்ட படங்களில் ‘பிரமயுகம்’ தவிர்த்து மற்றவை ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவானவை. ஆனால் வசூலில் சாதனை படைத்து மிரட்டி வருகின்றன.

குறைந்த பட்ஜெட்டில் கதையை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறி வரும் மலையாளம் படங்கள் இந்தாண்டும் தொடக்கத்திலிருந்து அதை நிரூபித்து வருகின்றன. ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ ஜோஸ் பெலிச்சேரி - மோகன்லால் கூட்டணி மட்டும் கைகொடுக்கவில்லை. ‘மலைக்கோட்டை வாலிபன்’ ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதில் பாதியை மட்டுமே ஈட்டியதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in