“நான் அமைதியாக இருந்தால் எல்லோருக்கும் நிம்மதி” - சமூக வலைதளத்துக்கு அல்போன்ஸ் புத்திரன் முழுக்கு

“நான் அமைதியாக இருந்தால் எல்லோருக்கும் நிம்மதி” - சமூக வலைதளத்துக்கு அல்போன்ஸ் புத்திரன் முழுக்கு
Updated on
1 min read

கொச்சி: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் ஃபேஸ்புக் பதிவு: “இனிமேல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் எதையும் நான் பதிவிடப்போவதில்லை. காரணம், நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என் தாய், தந்தை, தங்கைக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அவர்களை எனது உறவினர்கள் சிலர் அச்சுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். அப்படியே நடக்கட்டும், நன்றி” என பதிவிட்டுள்ளார்.

‘பிரேமம்’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். நீண்ட இடைவெளிக்குப் பின் அவரது இயக்கத்தில் வெளியான ‘கோல்டு’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர், இளையராஜா இசையமைக்கும் ‘கிஃப்ட்’ படத்தை இயக்கி வருவதாக அறிவித்திருந்தார். இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், திடீரென கடந்த அக்டோபர் மாதம் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், “என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதை கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் குறைந்தபட்சம் ஓடிடி அளவிலான குறும்படங்கள், பாடல்கள், வீடியோக்களை தொடர்ந்து இயக்குவேன்” என தெரிவித்தார்.

அண்மையில் அவரது சமூக வலைதள பதிவுகள் பரவலான கவனத்தை பெற்றன. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு அவர் வெளியிட்ட பதிவு வைரலானது. சில பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தச் சூழலில் தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறுவதாக அல்போன்ஸ் அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தை பொறுத்தவரை மற்ற இரண்டு சமூக வலைதளங்களைப்போல பெரிய அளவில் அவர் ஆக்டிவாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in