“கேரள தனியார் கல்லூரி மீது சட்ட நடவடிக்கை” - ‘காதல் - தி கோர்’ இயக்குநர் உறுதி

இயக்குநர் ஜியோ பேபி
இயக்குநர் ஜியோ பேபி
Updated on
1 min read

கோழிக்கோடு: “நான் போராடவில்லை என்றால் என்னைப் போல் இன்னொருவர் பாதிக்கப்படுவார். சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்” என கேரளாவின் தனியார் கல்லூரி ஒன்று தன்னை புறக்கணித்தது குறித்து மலையாள இயக்குநர் ஜியோ பேபி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

மம்மூட்டி - ஜோதிகா நடிப்பில் கடந்த நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘காதல் - தி கோர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து பேசும் இப்படத்தை ஜியோ பேபி இயக்கியுள்ளார். இந்நிலையில், அவர் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஃபாரூக் கல்லூரி (Farook College) மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொள்ள இந்த வீடியோவை வெளியிடுகிறேன். கோழிக்கோட்டில் உள்ள ஃபாருக் கல்லூரியில் ஃப்லிம் க்ளப் சார்பாக மலையாள சினிமா குறித்த நிகழ்வுக்கு என்னை அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்வில் பங்கேற்பதாக ஒப்புக்கொண்டு நானும் கோழிக்கோடுக்கு வந்திறங்கினேன். என்னுடைய மற்ற வேலைகளை விட்டு அதிகாலையிலேயே கோழிக்கோடு வந்துவிட்டேன். அப்போது நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் என்னை தொலைபேசியில் அழைத்து நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக கூறினார். ஆனால், அதற்கு தகுந்த காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

நான் அந்தக் கல்லூரியின் முதல்வரை மெயில் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றும் பயனுமில்லை. பின்னர், கல்லூரி மாணவர் சங்கம் சார்பில் எனக்கு ஒரு ஃபார்வடு மெசேஜ் வந்தது. அதில் ‘இயக்குநரின் எண்ணம் மற்றும் கருத்துக்கள் கல்லூரியின் மத நம்பிக்கைகளுக்கு எதிரானவை. அதனால் நிகழ்வுக்கு ஆதரவளிக்க முடியாது’ என மாணவர் சங்கம் சார்பில் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்லூரி நிர்வாகம் நிகழ்வை ஏன் ரத்து செய்தது என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும். இதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளேன். நான் போராடவில்லை என்றால் என்னைப் போல் இன்னொருவர் பாதிக்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in