

'விசுவாசம்' படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது என்று இசையமைப்பாளர் சாம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இயக்குநர் சிவா - யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகவே யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது.மீண்டும் அனிருத் தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மேலும், 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. பலரும் அவருடைய ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து இசையமைப்பாளர் சாம் தனது ட்விட்டர் பக்கத்தில், "தொடர்ந்து வரும் வாழ்த்துக்களால் திக்குமுக்காடி போயிருக்கிறேன். பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நான் 'விசுவாசம்' படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது. நான் பெரிய தல ரசிகன். கண்டிப்பாக எதிர்காலத்தில் தலயின் படத்துக்கு இசையமைப்பேன், ஆக்ரோஷமான பின்னணி இசை தருவேன். காத்திருங்கள், ஒரு சிறப்பான செய்தி வரவிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.பிப்ரவரியில் இக்கூட்டணி இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க சத்யஜோதி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. தீபாவளிக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.