நிவின் பாலியைத் தொடர்ந்து கேரள இளைஞருக்கு நடிகர்கள் ப்ரித்திவிராஜ், பார்வதி ஆதரவு

நிவின் பாலியைத் தொடர்ந்து கேரள இளைஞருக்கு நடிகர்கள் ப்ரித்திவிராஜ், பார்வதி ஆதரவு
Updated on
1 min read

போலீஸ் காவலில் தனது சகோதரர் மரணம் அடைந்ததையடுத்து, நீதி கேட்டு போராடி வரும் கேரள இளைஞர் ஸ்ரீஜித்துக்கு நடிகர் ப்ரித்திவிராஜ் மற்றும் நடிகை பார்வதி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 வருடங்களாக திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு முன் போராடி வருகிறார் ஸ்ரீஜித். இவரது இந்த போராட்டத்துக்கு தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது. மேலும், மாநில அரசும், சிபிஐ விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மலையாள திரைப் பிரபலங்கள் ஸ்ரீஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர் நிவின் பாலியைத் தொடர்ந்து தற்போது நடிகர் ப்ரித்திவிராஜ் ட்விட்டரில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். #JusticeForSreejith என்ற ஹாஷ்டேக் உடன் ட்விட்டரில் அவர் பதிவேற்றியதாவது:

"இன்றைய காலத்தில் மனித இனம் இழந்து வரும் ஒரு முக்கிய, நாம் மதிக்கத் தவறிவரும் குணாதியசத்துக்கு தனி மனிதனாக பிரதிநிதியாக நீங்கள் திகழ்கிறீர்கள் ஸ்ரீஜித். உண்மைக்கான தேடல், பொய்யான சமரசத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தல். இதை நீங்கள் உங்களது சகோதரருக்காக, குடும்பத்துக்காக, ஏன் உங்களுக்காகக் கூட செய்து கொண்டிருக்கலாம்.

prithvijpgட்விட்டர் பதிவு

ஆனால் அமைதியான போராட்டம், அமைதியின் வலிமை, தனிமனிதனின் வலிமை ஆகியவற்றை மறந்த ஒரு தலைமுறைக்கே இந்த போராட்டத்தின் மூலம், கடந்த 2 வருடங்களாக, நம்பிக்கையின் வடிவமாக மாறிவிட்டீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் உலகின் மனசாட்சியைத் தொட்டதற்கு நன்றி சகோதரா.

நீங்கள் தேடும் உண்மை உங்களுக்கு புலப்படட்டும். உங்களுக்கான நீதி கிடைக்கட்டும். உங்களுக்கு இதுவரை கிடைக்காத நிம்மதி விரைவில் கிடைக்கட்டும்" என்று ப்ரித்திவிராஜ் பதிவிட்டுள்ளார்.

நடிகை பார்வதி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்ரீஜித், உண்மை என்ற உங்களுடைய உரிமைக்கான போராட்டத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன். உண்மை தெரியாமல் இருப்பதோ, நீதி மறுக்கப்படுவதோ யாருக்கும் நடக்கக்கூடாது. உங்கள் சகோதரரின் உயிரை கவுரவப்படுத்த நீங்கள் எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு எங்களுக்கு உந்துதலைத் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in