

சசிகுமாரின், ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து, ‘மாயவன்’ படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் லாவண்யா, நடிகர் வருண் தேஜை காதலித்து வந்தார். இவர், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன். லாவண்யாவும் வருண் தேஜும் ‘மிஸ்டர்’, ‘அந்தாரிக்ஷம்’ படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர். அப்போது காதலில் விழுந்ததாகச் செய்திகள் வெளியாயின.
இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஜூன் 9-ம் தேதி நடந்தது. இதில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இப்போது இவர்கள் திருமணம் ஆக. 24ம் தேதி நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தாலியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இதிலும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரன்வீர்சிங் - தீபிகா படுகோன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி- நடிகை அனுஷ்கா சர்மா திருமணங்கள் இத்தாலியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.