

தமிழில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘வினோதய சித்தம்’ படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ள ‘ப்ரோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் ‘வினோதய சித்தம்’. கடந்த 2021ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி. தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் தயாராகியுள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த சூழலில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: நிற்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நாயகன் ஒரு பெரும் விபத்தில் சிக்குகிறார். விபத்தில் இறந்து போகும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறது மனித ரூபத்தில் வரும் காலம் (பவன் கல்யாண்). தனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் கடந்த காலத்தில் தான் வாழமுடியாத வாழ்க்கையை மீண்டும் வாழ நினைக்கிறார் ஹீரோ சாய் தேஜ். தமிழில் இல்லாத பல விஷயங்களை சேர்த்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. உதாரணமாக தமிழில் சண்டைக் காட்சிகள் எதுவும் கிடையாது. ஆனால் இதில் தெலுங்கு மசாலா படங்களுக்கே உரிய அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. அதே போல தமிழில் தம்பி ராமையா நாற்பதைக் கடந்த ஒரு குடும்பத் தலைவர். ஆனால் இதில் ஹீரோ இருபதுகளின் மத்தியில் இருக்கும் இளைஞர். இதுபோன்ற மாற்றங்களுக்கு உரிய நியாயங்களை திரைக்கதையில் இயக்குநர் செய்திருக்கிறாரா என்பதை 28ஆம் தேதி பார்க்கலாம். ‘ப்ரோ’ ட்ரெய்லர் வீடியோ: