

ஹைதராபாத்: ‘புராஜெக்ட் கே’ படத்தில் பிரபாஸின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ‘மோசமான ஃபோட்டோஷாப், தலையும் உடலும் சரியாக பொருந்தவில்லை’ என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனின் முதல் தோற்றப் பார்வை வெளியானது. அந்த தோற்றத்துக்கு பெரிய விளம்பரம் செய்த நிலையில் மிகச் சுமாரான தோற்றமாக அது வெளியானது. தற்போது பிரபாஸின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் பில்டப் கொடுக்கப்பட்டு தட்டையான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் போஸ்டர் வெளியாகியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், ‘தலையும் உடலும் சரியாக பொருந்தவில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொருவர், ‘மீண்டும் ஒரு ஆதிபுருஷ்’ என கிண்டலடித்துள்ளார்.
‘‘இதற்கு ஃபேன்மேட் போஸ்டரே எவ்வளவோ பரவாயில்லை. பெரிய பட்ஜெட் படத்தில் இப்படியான தோற்றம் ஏமாற்றமளிக்கிறது என நொந்துள்ளார் ரசிகர் ஒருவர்.
‘‘மிகப் பெரிய பில்டப்புக்கு பிறகு ஒரு சாதாரணமான லுக்” என ஒருவர் விமர்சித்துள்ளார்.