

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
‘சீதாராமம்’ படத்துக்குப் பிறகு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘கிங் ஆஃப் கோதா’. அபிலாஷ் ஜோஷி இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஐஸ்வர்யா லக்ஷ்மி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி?: பெரும்பாலும் ‘சாக்லெட்’ பாயாக மட்டுமே பார்த்து வந்த துல்கர் சல்மான் ரக்கட் பாயாக இப்படத்தின் டீசரில் மிரட்டுகிறார். குறிப்பாக, “இங்க நான் சொல்றப்போ தான் பகல், நான் சொல்றப்போ தான் ராத்திரி” என கேங்க்ஸ்டராக ‘கெத்தாக’ அவர் பேசும் வசனம் கவனம் ஈர்க்கிறது.
‘கேஜிஎஃப்’பட பாணியில் டீசரின் தொடக்கத்திலும் பின்னணியில் ஒரு பெண்ணின் குரலின் வழியே, ‘ராஜாவோட வருகைக்காக மக்கள் காத்திருந்தாங்க’ என்ற வசனம் ஒலிக்க ஐஸ்வர்யா லக்ஷ்மி, செம்பன் வினோத், அனிகா சுரேந்தர் கதாபாத்திரங்கள் தோன்றி மறைகின்றன. துல்கர் கூட இரண்டு காட்சிகளில் மட்டுமே இருட்டில் காட்டப்படுகிறார். பிரசன்னா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை யூகிக்க முடிகிறது. ஜேக்ஸ் பிஜோய் இசை தனித்து தெரிகிறது. டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.