விபத்தில் சிக்கிய கன்னட நடிகர் சூரஜ் குமாரின் கால் அகற்றம்

விபத்தில் சிக்கிய கன்னட நடிகர் சூரஜ் குமாரின் கால் அகற்றம்
Updated on
1 min read

கர்நாடகா: டிராக்டரை முந்தி செல்லும்போது டிப்பர் லாரியில் மீது பைக் மோதிய விபத்தில் சிகிச்சைப் பெற்று வந்த கன்னட நடிகர் சூரஜ் குமாரின் வலது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கன்னட நடிகரான சூரஜ் குமார் ‘ரத்தம்’ (Ratham) என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருடன் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒபந்தமாகியிருந்தார். முன்னதாக சூரஜ்குமார் ‘ஐராவதம்’, ‘தாரக்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் நெருங்கிய உறவினரும், தயாரிப்பாளர் எஸ்.ஏ. ஸ்ரீனிவாஸின் மகன் சூரஜ் குமார் தனது இருசக்கர வாகனத்தில், கடந்த சனிக்கிழமை மைசூரிலிருந்து ஊட்டிக்கு சென்றுள்ளார்.

அப்போது, தேசிய நெடுஞ்சாலை ட்ராக்டரை ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது அவரது வாகனம் கட்டுபாட்டை இழந்ததில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் படுகாயமடைந்த சூரஜ் குமார், உடனடியாக மைசூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் சூரஜ் குமாரின் உயிரை காப்பாற்றும் பொருட்டு, பலத்த சேதமடைந்த அவரது வலது காலின் முழங்காலுக்கு கீழே இருந்த பகுதியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 வயதான சூரஜ் குமாரை கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் அவரது மனைவி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in