

தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ படங்களில் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் அவர், இந்திப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இப்போது த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். இதில் மற்றொரு நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஷூட்டிங் தள்ளிப் போய் கொண்டே இருப்பது மற்றும் கதையில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.
அவருக்குப் பதிலாக ‘களரி’, ‘ஜூலை காற்றில்’, ‘வாத்தி’ படங்களில் நடித்த சம்யுக்தா நடிக்க இருக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார்.