

ஹைதரபாத்: நடிகை சமந்தா கடந்த வருடம் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், அவர் நடித்துக்கொண்டிருந்த ‘குஷி’ உட்பட சில படங்களின் படப்பிடிப்புத் தள்ளிப் போனது. அதில் இருந்து மீண்டு வர சில மாதங்கள் சிகிச்சை மேற்கொண்டார். முழுமையாக குணமடைந்து படங்களில் மீண்டும் நடித்து வருகிறார். இப்போது செர்பியாவில் நடக்கும் ‘சிட்டாடெல்’ வெப் தொடர் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்குள்ள தேவாலயம் ஒன்றில் வழிபாடு நடத்தியுள்ள அவர், அந்தப் புகைப்படத்துடன் உருக்கமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “தசை அழற்சி நோய் கண்டறியப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. எனது உடலுடன் பல போராட்டங்கள். என் சினிமா வாழ்க்கையிலும் தோல்விகள். ஒரு வருடம் ஆசீர்வாதம் மற்றும் பரிசுகளுக்காக பிரார்த்தனை செய்யவில்லை. வலிமையும் அமைதியும் பெற பிரார்த்தித்தேன். நினைத்தது போல எதுவும் நடக்காது என்பதை கற்றுக் கொடுத்த ஆண்டு இது. சில நேரங்களில் வெற்றி அவசியமில்லை. முன்னோக்கி நகர்வதே பெரிய வெற்றி. கடந்த கால சோகங்களையும் தோல்விகளையும் நினைத்து மூழ்கி விடக்கூடாது. தெய்வங்கள் சில விஷயங்களைத் தாமதிக்கலாம், ஆனால் கைவிடாது. அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வலிமையைத் தேடுபவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை” என தெரிவித்துள்ளார் சமந்தா.