புதிய கட்சி தொடங்கினார் கன்னட நடிகர் உபேந்திரா

புதிய கட்சி தொடங்கினார் கன்னட நடிகர் உபேந்திரா
Updated on
1 min read

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்கியுள்ளார். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவரது அறிவிப்பு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கட்சிக்கு கர்நாடக பிரஞ்யவந்தா ஜனதா கட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான உபேந்திரா இதுவரை 49 திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஷாலுடன் இணைந்து தமிழில் 'சத்யம்' படத்திலும் நடித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் இவர் தனது மனைவி நடிகை பிரியங்கா திரிவேதியுடன் மஜத வேட்பாளர் கீதா சிவராஜ்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போதே அவர் அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்தபோதிலும் அவர் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளை எழுதி வந்தார்.

இந்நிலையில் உபேந்திரா பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மக்களால், மக்களுக்காக, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எனது கட்சி இருக்கும். சிறந்த சமூகத்தை உருவாக்கும் வகையில் தங்களின் திட்டங்களை முன்வைக்கும் மக்கள் வரவேற்கப்படுகின்றனர்.

கட்சியின் இணையதளமும், மொபைல் செயலியும் நவம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்படும். எங்களின் கட்சி மாநிலத்தின் 224 தொகுதிகளிலும் போட்டியிடும்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருந்தாலும் மாற்றத்தை நோக்கி எங்களின் கட்சி பயணிக்கும்'' என்றார்.

சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடியை அவ்வப்போது புகழ்ந்து வந்த உபேந்திரா பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தனிக்கட்சி தொடங்கியுள்ளார் உபேந்திரா. இதன்மூலம் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in