

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'அதிரந்தி' வெளியீட்டில் தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வருகிறது.
'மெர்சல்' தெலுங்கு பதிப்பான 'அதிரந்தி' திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டது. அக்டோபர் 27-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் அதிகாரிகள் 'அதிரந்தி' படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை.
இதனால் இன்று (அக்டோபர் 27) படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் 'அதிரந்தி' வசனங்கள் மியூட் செய்யப்பட்டு படம் வெளியாவதாக செய்திகள் வெளியாகின. இதனை படக்குழு சார்பில் மறுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக "அதிரிந்தி படத்துக்கு சென்சாரின் வழக்கமான விதிகளின்படி வேலைகள் நடந்துவருகின்றன. காட்சிகள் வெட்டப்பட்டதாகவோ, வசனங்களின் ஒலி நீக்கப்பட்டதாகவோ வரும் தகவல்கள் உண்மையில்லை. விரைவில் அதிரிந்தி" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
'அதிரந்தி' திட்டமிட்டபடி வெளியாகாததால் தயாரிப்பாளருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.