

கொச்சி: பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த ‘மின்னல் முரளி’, ’2018’ ஆகிய படங்கள் தமிழிலும் வரவேற்பைப் பெற்றன. இவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘நடிகர் திலகம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹிட்டான ‘டிரைவிங் லைசென்ஸ்’ படத்தை இயக்கிய லால் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் டேவிட் படிக்கல் என்ற சூப்பர் ஸ்டார் நடிகராக டோவினா தாமஸ் நடிக்கிறார். இதன் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியானது. சவுபின் சாகிர், பாவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’, சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரைய்யா’, பாலகிருஷ்ணா நடித்த ‘வீரசிம்மா ரெட்டி’ உட்பட பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.