

'மெர்சல்' படத்தின் தெலுங்குப் பதிப்பான 'அதிரந்தி' (Adirindhi) திட்டமிட்டபடி நாளை வெளியாகவில்லை. தமிழ்ப் படம் வெளியாகும் போது ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து தெலுங்கில் தணிக்கைச் சான்றிதழ் வழங்காததால் படம் வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கிறது 'மெர்சல்'. தமிழில் விலங்குகள் நல வாரியம் மற்றும் தணிக்கையிலும் சிக்கல் ஏற்பட்டதால் இறுதிக்கட்டத்தில் வெளியாகுமா, ஆகாதா என்ற சூழல் நிலவியது. அதற்குப் பிறகு திட்டமிட்டபடி தீபாவளித் திருநாளான அக்டோபர் 18-ம் தேதி 'மெர்சல்' வெளியானது. ஆனால், படம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்தன.
ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்தனர். அந்த விவகாரமும் பிறகு சுமுகமாக முடிந்துவிட்டது.
இதனிடையே 'மெர்சல்' தெலுங்கு பதிப்பான 'அதிரந்தி' திட்டமிட்டப்படி தீபாவளியன்று வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டது. அக்டோபர் 27-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் அதிகாரிகள் இதுவரை 'அதிரந்தி' படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் படம் வெளியாவது தாமதமாகிறது. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆந்திராவில் விஜய்க்கு நல்ல வியாபார சூழல் இருக்கும் நிலையில், அங்கு திட்டமிட்டப்படி 'அதிரந்தி' படம் வெளியாகாதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.