

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘2018’ ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.
ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
படம் வெளியாகி நேற்றுடன் 33 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலக அளவில் ரூ.177 கோடி வசூலை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் அதிகபட்ச வசூலை குவித்துள்ள இந்தப் படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனிடையே, நன்றாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஓடிடியில் வெளியானதை கண்டித்து கேரளாவில் தியேட்டர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் யுனைடெட் ஆர்கனைசேஷன் ஆஃப் கேரளா (FEUOK) உடன் இணைந்துள்ள தியேட்டர்கள் இன்றும் நாளையும் அனைத்து திரைப்பட காட்சிகளையும் ரத்து செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. "தியேட்டர்களில் வெளியாகும் 99 சதவீத திரைப்படங்கள் தோல்வி அடைந்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், எதோ ஒரு படம் அதிர்ஷ்டவசமாக நன்றாக ஓடுகிறது. அதையும் சீக்கிரமே ஓடிடியில் ரிலீஸ் செய்வது என்பது ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ள FEUOK தலைவர் விஜயகுமார் இதனை கண்டித்து அடையாள போராட்டமாக இரண்டு நாள் தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய FEUOK தலைவர் விஜயகுமார், "கடந்த ஆண்டு, தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறைந்தது 42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்ற FEUOK-ன் கோரிக்கைக்கு கேரள திரைப்பட வர்த்தக சபை ஒப்புக்கொண்டது. இந்த ஒப்புதலை மீறி, 2018 திரைப்படம் 33 நாட்கள் இடைவெளியில் ஓடிடியில் வெளியாகியுள்ளது. எந்த நட்சத்திரங்களின் படமாக இருந்தாலும் சரி, அது திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும்.
இந்த இடைவெளியை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்ற அரசின் அறிவுரையை தயாரிப்பு நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளோம். ஆனாலும், இதுதொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அரசிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் அடையாளப் போராட்டமாக இரண்டு நாட்கள் தியேட்டர்களில் அனைத்துக் காட்சிகளையும் ரத்து செய்துள்ளோம்.
இன்னும் 20 நாட்கள் காத்திருப்போம், அரசு தரப்பிலிருந்தோ அல்லது பிற திரையுலக அமைப்புகளிடமிருந்தோ சாதகமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படும்" என்று அறிவித்துள்ளார்.