

மும்பை சர்வதேச குறும்பட விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ரஷ்ய கலாச்சார மையத்தில் விழாவை இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்.
மும்பை சர்வதேச குறும்பட விழா செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் தொடங்கியது. கடந்த 12 ஆண்டுகளாக மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த 13-வது சர்வதேச குறும்படம் மற்றும் ஆவணப்பட விழா முதல்முறையாக சென்னை, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, டெல்லி, குவஹாட்டி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இந்த விழா 9-ம் தேதி வரை நடக்கிறது.
சென்னையில் எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி மற்றும் ரஷ்ய கலாச்சார மையத்தில் 6 நாட்களில் குறும்படம், ஆவணப்படம், அனிமேஷன் படம் என மொத்தம் 56 படங்கள் திரையிடப்படுகின்றன.
தொடக்க விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நடிகை தேவயானி, ரஷ்ய தூதரக அதிகாரி மைக்கேல் ஜெ.கார்படவ், பத்திரிகை தகவல் மைய அதிகாரி ரவீந்திரன், எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டனர்.
விழாவைத் தொடக்கிவைத்து பாரதிராஜா பேசியதாவது:
சென்னையில் இந்த விழாவை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமா மீது ஆசை ஏற்பட்டு சென்னை வந்த நாட்களில் யாராவது கேமரா வைத்திருந்தால் அவர் பின்னால் ஓடியவன் நான். ஆவணப்படங்கள், குறும்படங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி நண்பர்களோடு சுற்றித் திரிந்திருக்கிறேன். ஆவணப் படங்களில் அசோசியேட் இயக்குநராக வேலை பார்த்தி ருக்கிறேன். அப்போது தான் டப்பிங், எடிட்டிங் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அதற்காகவே தேடிப்பிடித்து வேலை பார்த்தேன். அந்த நாட்கள் உற்சாகம் கொடுத்தது. சினிமா இயக்கப் போகிறோமோ இல்லையோ, குறும்படங்களாவது எடுக்க வேண்டும் என்று நிறைய கதைகள் எழுதி வைத்திருந்தேன்.
இப்போது நிறைய படித்த இளைஞர்கள் வருகிறார்கள். தற்போதைய சினிமா விசாலமாக, விரிவாக இருக்கிறது.
பொதுவாக, இரண்டரை மணி நேர படம் எடுப்பது எளிது. அதையே 10 நிமிடத்துக்குள் கொண்டு வர திறமை வேண்டும். அதை இப்போது சிறப்பாக செய்கிறார்கள். இது எளிதான விஷயமல்ல. இங்கே திரையிடப்படும் எல்லா படங் களையும் பார்க்க ஆசையாக இருக்கிறது. நேரம்தான் இல்லை. இது நல்ல முயற்சி.
இவ்வாறு பாரதிராஜா கூறினார்.