“என்னைப் பற்றிய வதந்தியை நம்பாதீர்” - சின்னத்திரை நடிகை அமுதா விளக்கம்

“என்னைப் பற்றிய வதந்தியை நம்பாதீர்” - சின்னத்திரை நடிகை அமுதா விளக்கம்
Updated on
1 min read

கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து பிரபல சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலைக்கு முயன்றதாக பரவிய வதந்திகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தத் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகை அமுதா கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை சாலிகிராம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகை அமுதா (28). இவரது கணவர் ஐடி நிறுவன ஊழியர் சக்தி பிரபு (30). இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. அமுதா படப்பிடிப்புக்குச் சென்று வீடு திரும்ப இரவு நீண்ட நேரமாவது வாடிக்கையாகியுள்ளது, அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும், சீரியல்களில் நடிப்பதை நிறுத்தும்படி கூறி வந்ததற்கு அமுதா உடன்படவில்லை என்றும் காரணங்கள் அடுக்கப்பட்டு, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாட்டால், மனைவியை பிரிந்து ஆவடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சக்தி பிரபு சென்று விட்டார் என்று கூறப்பட்டது.

கணவருடன் பல முறை பேச முயன்றும் முடியவில்லை என்பதால் வேதனை அடைந்த அமுதா நேற்று முன்தினம் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் பரவியது. அத்துடன், விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

“கிராமத்தில் இருக்கிறேன்” - இந்நிலையில், அமுதா விளக்கம் அளித்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “இப்போது ஒரு வீடியோ வைரலாக போய்க் கொண்டிருக்கிறது. கணவருக்கும் எனக்கும் பிரச்சினை என்பது போலவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. அதை யாருமே நம்பாதீர்கள். அது ஒரு போலியான வீடியோ. நான் எனது சொந்த ஊரில் இருக்கிறேன். ஏன் இப்படியொரு வீடியோ பதிவு வந்தது என தெரியவில்லை. அந்த வீடியோ பதிவு போலியானது என்று அனைவருமே ரிப்போர்ட் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in