

பாஸ்கர் சக்தி இயக்கிய ‘ரயில்’ மற்றும் ‘பிரபா’ படங்களுக்கு இசை அமைத்தவர் எஸ்.ஜே.ஜனனி. பின்னணி பாடகியுமான இவர், கர்னாடிக், இந்துஸ்தானி, வெஸ்டர்ன் இசையில் நன்கு பயிற்சி பெற்றவர். இசையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ஜனனி, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் அடுத்து சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல மேற்கத்திய இசைக் கலைஞர் அண்டானியோ வெர்காராவின் புதிய இசை ஆல்பமான ‘த ஃபியூரி’யில் ஒரு பாடலை பாடியுள்ளார். 13 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்தில் பல்வேறு சர்வதேச இசைக் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் எஸ்.ஜே.ஜனனியின் பங்களிப்பு ஆல்பத்தின் தனித்தன்மையை அளித்துள்ளது.
இந்த ஆல்பம் இசைத்துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் ‘கிராமி’ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘சமகால புளூஸ் ஆல்பம்’ என்ற பிரிவில் இந்த ஆல்பம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனனி தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விருது விழாவில், வெற்றி பெறும் ஆல்பத்துக்கான விருது அறிவிக்கப்படும்.