புதிய ஜேம்ஸ் பாண்ட் 007 ஆக நடிகர் ராபர்ட் பேட்டின்சன் தேர்வு

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் அறிவிப்பு
புதிய ஜேம்ஸ் பாண்ட் 007 ஆக நடிகர் ராபர்ட் பேட்டின்சன் தேர்வு
Updated on: 
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக சினிமாவின் புகழ்பெற்ற கதாபாத்திரமான 'ஜேம்ஸ் பாண்ட் 007' வேடத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் நடிக்கவுள்ளதாக அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் இந்த திரைப்படத்தை, ‘ட்யூன்’ படங்களின் இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ் இயக்கவுள்ளார். ஸ்டீவன் நைட் இப்படத்துக்கு திரைக்கதை எழுத, எமி பாஸ்கல் மற்றும் டேவிட் ஹேமன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இந்த புதிய வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகர் ராபர்ட் பாட்டின்சன், "திரையுலகின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றான ஜேம்ஸ் பாண்ட் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது வாழ்நாள் கவுரவமாகும்.

என் மீது நம்பிக்கை வைத்த அமேசான் எம்.ஜி.எம் ஸ்டுடியோஸ் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தப் பாத்திரம் எனக்குக் கிடைத்திருப்பது ஒரு கனவு நனவான தருணம் என்று சொல்வது கூடக் குறைவுதான். இந்த அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆவலாக உள்ளேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ் கூறுகையில், "எங்களது புதிய ஜேம்ஸ் பாண்டாக ராபர்ட் பேட்டின்சனை வரவேற்பதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம் 007 கதாபாத்திரத்துக்கான காலத்தால் அழியாத ஆன்மாவும், முற்றிலும் புதிய உத்வேகமும் உள்ளது. படப்பிடிப்பைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

19 வயதில் 'ஹாரி பாட்டர் அண்ட் தி கோப்லெட் ஆஃப் ஃபயர்' மூலம் கவனம் ஈர்த்த ராபர்ட் பேட்டின்சன், 'ட்வைலைட்' படவரிசையின் மூலம் உலகப் புகழ் பெற்றார். தொடர்ந்து நோலனின் 'டெனட்', 'தி லைட்ஹவுஸ்', 'குட் டைம்', 'தி பேட்மேன்', 'மிக்கி 17' உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், சமீபத்தில் 'பிரைம்டைம்', நோலனின் 'தி ஒடிஸி' மற்றும் 'தி டிராமா' ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார். 

தற்போது 'தி பேட்மேன்’ பாகம் 2 படத்தில் நடித்து வரும் அவர், இந்த ஆண்டு இறுதியில் டெனிஸ் வில்லெனுவ் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'டியூன்: பாகம் 3' திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக 2022-ஆம் ஆண்டில் எம்ஜிஎம் நிறுவனத்தை அமேசான் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, 2025 மார்ச் மாதம் பார்பரா ப்ரோக்கோலி மற்றும் மைக்கேல் ஜி. வில்சன் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் முழுமையான படைப்புரிமையை அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய ஜேம்ஸ் பாண்ட் 007 ஆக நடிகர் ராபர்ட் பேட்டின்சன் தேர்வு
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அன்புடன் மகி’

X