

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட், ‘ஸ்பைடர்மேன்’ வரிசை படங்கள் மூலம் உலக அளவில் புகழ்பெற்றவர். இவரும் ‘ஸ்பைடர்மேன்’ படத்தில் நடித்த ஸெண்டயாவும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.
திரையில் ஜோடியாக நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் இணைய இருப்பதாக வந்த தகவலை, டாம் ஹாலண்ட் உறுதி செய்திருந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள பிரேவ்புரூக் என்ற நட்சத்திர ஓட்டலில் திருமணக் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும் இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற திருமணக் கொண்டாட்டத்தில் ஹாலிவுட் நடிகர்கள் உள்பட சுமார் 250 பேர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ரகசியமாக நடைபெற்ற இவ்விழாவில், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதைத் தடுக்கும் வகையில் செல்போன்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த 3 நாள் திருமணக் கொண்டாட்டத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.40 கோடி செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.