'அன்று தனியாக இருந்திருந்தால் எனக்கு மரணமே வழி' - விபத்துக்கு பிறகு முதல் முறையாக அவெஞ்சர்ஸ் நடிகர்

'அன்று தனியாக இருந்திருந்தால் எனக்கு மரணமே வழி' - விபத்துக்கு பிறகு முதல் முறையாக அவெஞ்சர்ஸ் நடிகர்
Updated on
1 min read

கடந்த ஜனவரி 2-ம் தேதி விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப் பெற்று வந்த ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் முதல்முறையாக விபத்து குறித்து பேசியுள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். அதேபோல 2010-ம் ஆண்டு வெளியான ‘தி டவுன்’ படத்தின் சிறந்த உறுதுணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். மேலும், ஹாலிவுட்டின் மார்வல் சீரிஸ் படங்களான ‘அவெஞ்சர்ஸ்’, ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படங்களில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெர்மி ரென்னர்.

இவர் கடந்த ஜனவரி 2-ம் தேதி விபத்து ஒன்றில் சிக்கினார். அமெரிக்காவிலுள்ள ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஜெர்மி ரென்னர் காரில் சென்றுள்ளார். அப்போது, கடும் குளிர் காற்றுடன் ஏற்பட்ட பனிப்பொழிவால், கட்டுப்பாட்டை இழந்த ரென்னரின் கார் சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு, அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அவர், நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில், "விபத்து நடந்தபோது நான் மட்டும் தனியாக இருந்தால், எனக்கு மரணமே வழியாக இருந்திருக்கும். நிச்சயம் இருந்திருப்பேன். ஆனால் அன்று என் சகோதரியின் மகன் அலெக்ஸ் இருந்தான். விபத்தில் எனது 30க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்தன. விபத்துக்கு பின் உயிர் பிழைக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிர் பிழைப்பது கடினம் என்றுதான் நினைத்தேன். இதனால் என் குடும்பத்தினருக்கு சொல்ல வேண்டிய என்னுடைய கடைசி வார்த்தைகளை மொபைலில் டைப் செய்தேன்.

விபத்தில் நான் சிக்கியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால், அன்று நான் இல்லை என்றால் அலெக்ஸ் சிக்கியிருப்பான். அவனை காப்பாற்ற முயன்று நான் விபத்தில் சிக்கினேன். அலெக்ஸைக் காப்பாற்ற மீண்டும் ஒருமுறை இந்த நிலைமை வந்தால், அப்போதும்கூட நான் இதை செய்ய தயாராகவே இருப்பேன். இந்த விபத்து என்னைக் சாகடிக்கப்போவதில்லை. அதற்கு நோ வே" என்று பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in