

9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் இந்தியாவில் வெளியாகும் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சூப்பர் ஹீரோ படமான ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் அப்படங்கள் வசூலை குவித்துள்ளன. ஸ்பைடர் மேன் படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, அதன் தயாரிப்பாளர்கள் மேலும் மக்களை கொண்டு சேர்க்கும் வகையில், படத்தை ஒரு பான்-இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர்.
அதன்படி, ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, ஸ்பைடர்மேன் சீரிஸ் திரைப்படம் 10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை.
இதுதொடர்பாக பேசியுள்ள சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (SPRI) இந்திய தலைவர் ஷோனி பஞ்சிகரன், "ஸ்பைடர் மேன் இந்தியாவில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஹீரோ. ஸ்பைடர் மேன் படங்கள் வெளிவரும்போது நாடு முழுவதும் கொண்டாட்டமாக அமைகிறது. இறுதியாக வந்த ஸ்பைடர் மேன் 'நோ வே ஹோம்’, ஸ்பைடர் மேனின் ரசிகர்களை தீவிர ரசிகர்களாக மாற்றியது.
தற்போது பிராந்திய மொழிகளின் உள்ளடக்கத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோவை சொந்த மொழியில் கண்டு அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தே ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்தை 10 மொழிகளில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தியா ஸ்பைடர் மேனை விரும்புகிறது, எனவே இவ்வெளியீடு எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தை மிகவும் விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.