

பிராட் பிட்டை பிரிந்த ஒரு வருடத்துக்குப் பிறகு நடிகை ஏஞ்சலினா ஜோலி மீண்டும் நடிக்க வருகிறார்.
சரி செய்ய முடியாத கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிராட் பிட்டை விவாகரத்து செய்தார் ஜோலி. குடும்பத்தின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஏஞ்சலினாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில், ஜோலி இயக்கத்தில் ஃபர்ஸ்ட் தே கில்ட் மை ஃபாதர் என்ற படம் திரையிடப்பட்டது. அப்போது ஊடகங்களிடம் பேசிய ஜோலி, அடுத்ததாக நான் எதுவும் இயக்குவதாக இல்லை. அதனால் நடிக்கலாம் என்றிருக்கிறேன் என்றார்.
"எனது குடும்ப சூழல் காரணமாக, எனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு வருடம் எடுத்துக் கொண்டேன். வேலைக்கு செல்ல சரியான நேரம் எது என்பதை நான் உணரும்போது நான் வேலைக்கு செல்ல வேண்டும். எனது இருப்பு வீட்டில் தேவைப்பட்டது. இப்போது, இன்னும் சில மாதங்களில், மீண்டும் நடிப்புக்குத் திரும்புவேன் என நம்புகிறேன்.
மேல்ஃபிஷியண்ட் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன. க்ளியோபாட்ரா பற்றிய கதையும் இருக்கிறது. பல விஷயங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. நான் இன்னும் எதிலும் ஒப்பந்தமாகவில்லை" என்று ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார்.