

அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் 3டி தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடியாக இருக்கும் என்றும், ரசிகர்கள் 3டி கண்ணாடிகள் அணியாமல் 3டி அனுபவத்தைப் பெற முடியும் என்றும் அந்தப் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு வெளியான அவதார் படத்தில் பெர்ஃபாமன்ஸ் கேப்சர் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தினார் இயக்குநர் கேமரூன். சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படமாக அவதார் சாதனை படைத்தது. தற்போது அவதார் படத்தின் அடுத்த பாகங்களுக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிறார் கேமரூன்.
3டி காட்சிகளை இன்னும் எளிதாக பார்க்கும்படி ஒரு தொழில்நுட்பத்தை கொண்டு வர நினைக்கும் கேமரூன் தன் பரிசோதனையில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் படம் பார்க்கும் விதத்தை மாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
"நான் எல்லைகளை இன்னும் பெரிதாக்குகிறேன். மேம்பட்ட கருவிகள், வேலைத் திறன், உயர் நேர்த்தி மற்றும் அதிக ஃபிரேம் விகிதம் என அனைத்திலும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். எனக்கு 3டியின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் திரையிடல் இன்னும் பிரகாசமாக வேண்டும். ஒரு கட்டத்தில் 3டி கண்ணாடி இல்லாமல் அது சாத்தியமாகும், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை" என்றார் அவர்.