

''உங்கள் தோற்றத்திற்காக உங்களை கேலி செய்யும் நபர்களைப் பற்றி கவலை வேண்டாம். ஒருநாள் ஹாலிவுட் ஹீரோ உங்களை செக்ஸி தமிழ் ஃபிரெண்ட்'' என அழைக்கக் கூடும் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற படங்களை இயக்கியதற்காக பரவலாக அறியப்படுபவர்கள் ஜோ ருஸ்ஸோ, அந்தோனி ருஸ்ஸோ. இவர்கள் இருவரும் சகோதரர்கள். 'ருஸ்ஸோ சகோதரர்கள்' என இவர்கள் பிரபலமாக அறியப்படுகிறார்கள். கடந்த 2009-இல் வெளியான 'தி கிரே மேன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு படம் இயக்கி முடித்துள்ளனர்.
படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். அழுத்தமான சண்டைக் காட்சியில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார். இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 22-ம் தேதி வெளியானது.
நடிகர் தனுஷின் நடிப்பு படத்தில் பரவலாக பேசப்பட்டது. படத்தில் தனுஷ் தமிழராகவே அடையாளப்படுத்தப்படுகிறார். குறிப்பாக கிறிஸ் எவன்ஸ் தனுஷின் அறிமுகக் காட்சியில், 'செக்ஸி தமிழ் ஃபிரெண்ட்' என அழைக்கிறார். இந்தக் காட்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்நிலையில், படத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், தனுஷ் பேட்டி கொடுக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், 'உங்கள் இளைமைக் காலத்திற்கு நீங்கள் சொல்ல நினைக்கும் அறிவுரை என்ன?' என்ற கேள்வி எழுப்பபடுகிறது.
அதற்கு பதிலளிக்கும் தனுஷ், ''உங்கள் தோற்றத்திற்காக உங்களை ட்ரோல் செய்யும் நபர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நான் அவரிடம் கூறுவேன். ஒருநாள் ஒரு பெரிய ஹாலிவுட் ஹீரோ உங்களை 'செக்ஸி தமிழ் ஃபிரெண்ட்' என்று அழைப்பார்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நெட்ஃப்ளிக்ஸ், ''தனுஷ் அவரது இளமைக் காலத்திற்கு ஒரு அறிவரை கூறுகிறார். அது நாம் இதுவரை கேள்விப்படாத அறிவுரை'' என கேப்ஷனிட்டுள்ளது. அவரது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.