

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. 8 சீசன்களைக் கொண்ட இத்தொடர் 2019ம் ஆண்டு நிறைவுபெற்றது. இத்தொடரை எச்பிஓ நிறுவனம் தயாரித்திருந்தது. ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்தொடர் சிறந்த தொடரருக்கான எம்மி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளது. வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர் தான் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.
இந்நிலையில் இத்தொடருக்கு முந்தைய கதையானது வெப் சீரிஸாக எடுக்கப்பட்டுள்ளது. இத்தனையும் எச்பிஓ நிறுவனமே தயாரித்துள்ளது. இத்தொடருக்கு ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ கதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்வுகள் நடக்கும் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்டது. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கதையில் வெஸ்டெரோஸில் மிகப்பெரிய அரசியல் எழுச்சியை செய்த டேனெரிஸ் டர்கேரியன்ஸ் மூதாதையர்களான டர்கேரியன்ஸ் வம்சத்தை மையமாகக் கொண்டு, அவர்களின் அயர்ன் த்ரோனுக்கான உள்நாட்டுப் போரை அடிப்படையாக கொண்டு வெளியாகவுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த தொடர், ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ டிரெய்லரை எச்பிஓ நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடருக்கு சற்றும் சளைக்காத முறையில் டிராகன், சண்டை, பிரமாண்டம் என ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ டிரெய்லர் பிரமிக்க வைத்துள்ளது. வெளியான சில மணிநேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.