விஞ்ஞான வெற்றிகளும் சமூக பொறுப்பும் - ‘Jurassic World Dominion’ உணர்த்தும் உண்மை

விஞ்ஞான வெற்றிகளும் சமூக பொறுப்பும் - ‘Jurassic World Dominion’ உணர்த்தும் உண்மை
Updated on
5 min read

"இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்... கலை வளர்ந்ததும் இங்கேதான்... காதல் சொன்னதும் இங்கேதான்..." - இப்படியொரு இளையராஜா பாடலுண்டு. சாமானியனிடம் தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை இந்தப் பாடல் வரிசைப்படுத்துவதாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக சினிமா என்ற கலைவடிவத்தின் சாத்தியங்களை அந்தப் பாடல் பேசுவதாக நாம் எடுத்துக்கொள்ள முடியும். அந்த அளவிற்கு, நிஜத்தை நிழலாகவும், நிழலை நிஜமாகவும் காணச் செய்யும் அசாத்தியம் சினிமாவுக்கு மட்டுமே சாத்தியம். அதனாலேயே சினிமா துறை ‘கனவுகளின் தொழிற்சாலை’ எனப்படுகிறது.

மற்ற எல்லா கலைகளையும் போல அனைத்து சாதக, பாதகங்களும் சினிமாவும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் அனைத்து கலைகளையும் தன்னுள்ளடக்கி இருக்கும் சினிமாவின் சாகத, பாதகங்களின் வீச்சு மிகவும் அதிகம். ஒரு கனவை, ஒரே நேரத்தில் ஓராயிரம் பேரை காணச் செய்யும் மாயாஜால வித்தை சினிமாவுக்கு மட்டுமே சாத்தியம். அந்த சாத்தியம் சில நேரங்களில் பல உண்மைகளையும் உரக்கச் சொல்லி விடுகிறது. ஊழிக்காலத்தில் அழிந்து போன 'டைனோசர்' என்னும் பேரினத்தை மரபணு தொழில்நுட்பம் மூலம் நம் கண்முன் உலவச்செய்து காட்டிய ஹாலிவுட் சினிமா, அப்படி ஒரு உண்மையை மீண்டும் உரக்கச் சொல்லிருக்கிறது.

கலைகள் - கண்டுபிடிப்புகள் - சமூகப் பொறுப்புகளுக்குள் உள்ள இடைவெளி அதிகரித்து கொண்டே வரும் இந்த வேளையில், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிக்கும் 'ஜுராசிக் வோர்ல்டு - டொமினியன்' (Jurassic World Dominion) திரைப்படம் நமக்கு உணர்த்தும் உண்மை குறித்து அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தின் ரெஸ்பான்சிபில் இன்னோவேஷன் துறை பேராசிரியர் ஆண்ட்ரூ மேனார்ட் எழுதிய கட்டுரை ஒன்று கவனம் ஈர்க்கிறது.

அந்தத் திரைப்படத்தின் நிழல் கதை, நிஜ உலகத்திற்கு உணர்த்தும் செய்தி குறித்து 'தி கான்வர்சேஷன்' தளத்தில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது...

'ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன்' - அதிரடி அதகளக் கதையினுடாக பின்னப்பட்டிருக்கும் இந்த மிகைப்படுத்தப்பட்ட ஹாலிவுட் பொழுதுபோக்கு சினிமா, யதார்த்தை அனுமதிக்க மறுத்திருக்கிறது. இருந்தாலும் அதன் முந்தையப் படங்களைப் போலவே தொழில்நுட்ப மாயையுடன் இந்தப் படம் சுட்டிக்காட்டும் எச்சரிக்கை கதை நிஜமானவை.

என்னுடைய புத்தகமான 'ஃபிலிம் ஃப்ரம் தி ஃபியூச்சர்'-ல் நான் சுட்டிக்காட்டியிருந்ததைப் போல, கடந்த 1990-களில் வெளியான மைக்கேல் கிரிக்டனின் நாவலை அடியொற்றி, 1993-ல் வெளியான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் 'ஜுராசிக் பார்க்' படம் கட்டுப்பாடற்ற தொழில்நுட்பம் மற்றும் பொறுப்பற்ற கண்டுபிடிப்புகளின் ஆபத்துக்களைத் தோலுரிக்க தவறவில்லை. நிஜ உலகில் டிஎன்ஏ-வை கையாளுவதற்கான சாத்தியங்களை விஞ்ஞானிகள் நெருங்கியிருந்த அந்த வேளையில் நாவலும், திரைப்படத்திலும் கடவுள், இயற்கையான மரபணுக் குறியீடுகளுடன் விளையாடுவது அழிவுக்கான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்ற கவலையை எழுப்பி இருந்தன.

இது, அந்தப் படத்தில் நடிகர் ஜெஃப் கோலட்ப்லம் நடித்திருந்த முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றான டாக்டர் ஐயன் மால்கம் பாத்திரம் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். படத்தில் அவர், "உங்களுயை விஞ்ஞானிகள் தங்களால் முடியுமா என்ற யோசித்தார்களே தவிர, இது தேவைதானா என்று யோசிக்கவில்லை" என்று கூறுவார்.

"ஜுராசிக் பார்க்" பட தொடர்ச்சியின் சமீபத்திய மறுதொடக்கமாக வந்திருக்கும் படத்திலும், மிகச் சிறந்தென கருதப்படும் தவறான கண்டுபிடிப்புகளின் விளைவுகளை சமூகம் சந்திக்கிறது. "முடியுமா", "தேவையானதா" என்ற வேண்டுதல் மாற்றியமைக்கப்பட்டு, மீண்டும் எழுப்பப்பட்ட டைனோசர்கள் சுதந்திரமாக உலவும் எதிர்காலத்திற்கு வழிவகுத்திருக்கிறது. அதேநேரத்தில் உலகிலுள்ள ஒரு விலங்கினமாக மனிதகுலத்தின் அச்சுறுத்தலுக்கும் அது ஆளாகியிருக்கிறது.

முன்னெப்போதையும் விட இந்தப் படத்தின் மையக்கரு மிகவும் நெருக்கமான கேள்வியை தன்னுள் வைத்திருக்கிறது. அதாவது, ஜுராசிக் பார்க் படத்திலிருந்து ஆராய்ச்சியாளர்கள் பாடம் கற்றுக்கொண்டார்களா? அல்லது "முடியும்", "வேண்டும்" என்பதற்கான இடைவெளியை நிரப்பி விட்டார்களா? டிஎன்ஏவைக் கையாளும் அறிவியல், தொழில்நுட்பம் இரண்டையும் எவ்வாறு அறவழியில் பொறுப்புடன் பயன்படுத்துவது என்ற ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகளை முன்வைக்கின்றன.

மரபணுவை (மறு)வடிவமைத்தல்: கடந்த 2001-ம் ஆண்டு மனித மரபணுவின் முதல் வரைவு பெரும் ஆராவாரத்துடன் வெளியிடப்பட்டது. இது சிக்கலான மரபணு வரிசைகளை வாசிக்கவும், வடிவமைக்கவும், மாற்றியமைக்கவும் ஒரு மேடை அமைத்துக் கொடுத்தது. இருந்தாலும் இந்தத் தொழில்நுட்பம் அதிக நேரத்தை எடுத்துக்கொள்பவையாகவும், அதிகசெலவு பிடிக்கும் விஷயமாகவும் இருந்தது. அதனால் பல ஆராய்ச்சியாளர்களுக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கின்றது.

மனிதனின் முதல் மரபணு வரைவுக்கு 300 மில்லயன் அமெரிக்க டாலர்கள் செலவானது. அடுத்த முழு மரபணு தொகுதிகளுக்கும் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என மதிப்பிடப்பட்டது. மிகப்பெரிய அளவில் நிதியளிக்கப்படும் ஆராய்ச்சிக் குழுவைத் தவிர மற்றவர்களுக்கு இந்த தொகை என்பது எட்ட முடியாத உயரம்தான்.

இந்தத் தொழில்நுட்பங்கள் மாற்றியமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் ஒன்று இணையத்தில் வந்தது. இதன் மூலம் சிறிய ஆய்வகங்கள், மாணவர்கள் மற்றும் தொழில் முறையாக இல்லாமல் பொழுதுபோக்காக உயிரியல் ஆய்வில் ஈடுபடும் “DIY bio" பொழுதுபோக்காளர்களும் சுந்திரமாக ஆய்வு செய்யவும், மரபணுவை வாசிக்கவும், எழுதவும் வழிவகை செய்யப்பட்டது.

கடந்த 2005-ல் உயிரி பொறியியலாளரான ட்ரூ எண்டி, பொறியியலாளர்கள் மின்னணு கூறுகளை கையாளுவது போல, மரபணுவையும் கையாள முடியும் என்று ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

மின்னணு வடிவமைப்பாளர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் பொருளை விட, குறைகடத்திகள் குறித்த இயற்பியலில் குறைவான அக்கறையே கொண்டிருக்கிறார்கள். அதேபோல, "பயோபிரிக்" என்றழைக்கப்படும், டிஎன்ஏவை அடிப்படையாக கொண்ட பொருளை உருவாக்க முடியும் என்றும், விஞ்ஞானிகள் உயிரியலில் நிபுணர்களாக இல்லாதபோதிலும் பயோபிரிக்சை பயன்படுத்த முடியும் என்று அவர் வாதிட்டார்.

ட்ரூ எண்டி மற்றவர்களின் பணிகள், "சின்தட்டிக் பயாேலஜி " என்ற வளர்ந்து வரும் துறைக்கு அடித்தளமிட்டு, மரபணுக்களை கையாளுவதற்கான பொறியியல் மற்றும் வடிவ கொள்கைகளை செயல்படுத்தின.

இதன்பிறகு, விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், கலைஞர்கள் கூட டிஎன்ஏ-வை ஒரு மரபணு குறியீடாக அணுகத் தொடங்கினர். அது ஒரு புகைப்படம், வீடியோ போல டிஜிட்டல் மயமயப்படுத்தப்பட்டு, சைபர் வெளியில் கையாளப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இதன்மூலம், தாவரங்கள், நுண்ணுயிர்கள், பூஞ்சைகளை மாற்றியமைத்து மருந்து பொருள்கள் மற்ற பயனுள்ள பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. உதாரணமாக மாற்றியமைக்கப்பட்ட ஈஸ்ட், இது வெஜிட்டேரியன் பர்கரில் இறைச்சி சுவையை உருவக்குகிறது.

மரபணு திருத்தத்தின் மீது ஆர்வம் அதிகரித்திருந்தபோதிலும், சின்திட்டிக் பயோலஜியின் முன்னோடிகளின் சிந்தனை மற்றும் பார்வைக்கும் மரபணுவைத் திருத்தி அமைக்கும் வேகமும், அதற்கான செலவும் தடையாக இருந்தன. அதன் பின்னர் CRISPR அனைத்தையும் மாற்றியமைத்தது.

CRISPR தொழில்நுட்பம்: 2020-ம் ஆண்டு, விஞ்ஞானிகளான ஜெனிபர் டவுட்னா, இம்மானுவேல் சார்பென்டியர் இருவரும் தங்களுடைய புரட்சிகரமான மரபணுவை திருத்தம் செய்யும் புதிய தொழில் நுட்பத்திற்காக வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றனர். இவர்களது CRISPR தொழில்நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கு, மரபணுக்குள் இருக்கும் டிஎன்ஏ வரிசைகளை துல்லியமாக வெளியே எடுக்கவும் மாற்றவும் உதவி செய்தது. CRISPR (க்ளஸ்டர்டு ரெகுலர் இன்டர்ஸ்பேஸ்டு ஷார்ட் பாலிண்ட்ரோமிக் ரிபீட்ஸ்) வேகமானது, செலவு குறைந்தது, கையாளுவதற்கு எளிதானது. இது டிஎன்ஏ கோடர்களின் (Coders) கற்பனையை கட்டவிழ்த்து விட்டது.

மரபணு குறியீட்டின் முந்தைய வளர்ச்சிகளைவிட CRISPR நுட்பம், டிஜிட்டல் கோடிங், சிஸ்டம் இன்ஜினியரிங்க் தொழில்நுட்பத்தை உயிரியலுக்கு பயன்படுத்தியது. இந்தக் கலப்பு யோசனை முறை டிஎன்ஏ-வை கணினி தரவுகளாக சேமிக்கவும், முப்பரிமாண டிஎன்ஏ மாதிரி கட்டமைப்புகளை உருவாக்கவும் வழிவகுத்துக் கொடுத்தது. CRISPR விஞ்ஞானிகளுக்கு முழு உயிரினத்தை மாற்றி அமைப்பது, அழிந்துவிட்ட உயிரினங்களை மீண்டும் உருவாக்குவது குறித்து ஆராய வழி அமைத்து கொடுத்தது.

CRISPR - உயிரினத்தின் மரபணுவில் நேரடியாக ஒரு மரபணு குறியீட்டை உள்ளே சொருகி விடுகிறது. அந்தக் குறிப்பிட்ட பண்பு பரம்பரையாக அடுத்த தலைமுறைகளுக்கும் மாற்றப்படுவதை உறுதி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் தற்போது நோய் பரப்பும் கொசுகளின் மீது பரிசோதித்து வருகின்றனர்.

இந்த தொழில்நுட்பத்தால் சாத்தியமான நன்மைகள் இருந்த போதிலும், மரபணு இயக்கிகள் முக்கியமான அறநெறி கேள்வி ஒன்றை முன்வைக்கின்றது. மக்களின் பொது சுகாதாரத்தை அச்சுறுத்தி வரும் கொசுகள் மீது இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், இந்த கேள்வியை எளிதில் கடந்துவிட முடியாது. எதிர்கால சந்ததிகளின் தடகள செயல்பாட்டை அதிகரிப்பது போன்ற மனிதகளின் கற்பனையான செயல்பாடுகளை கணக்கில் கொண்டு யோசித்தால் விளைவுகள் இன்னும் சிக்கலானதாக மாறிவிடும்.

செயல்பாடுகளின் ஆதாயம்: மரபணுவை திருத்தி அமைப்பது, தனிப்பட்ட செல்களில் நடத்தைகளை மரபணு ரீதியாக மாற்றியமைப்பதை எளிமையாக்கியுள்ளது. இது விமான எரிபொருள் முதல் உணவு பொருள்கள் வரையுள்ள பயனுள்ள பொருள்களை உற்பத்தி செய்ய எளிய உயிரிகளின் மரபணுக்களை மாற்றியமைக்கும் உயிரி உற்பத்தி தொழில்நுட்பத்தின் மையமாக இருக்கிறது. அதே நேரத்தில், மரபணு மாற்றி அமைக்கப்பட்ட வைரஸ் சர்ச்சைகளுக்கும் மையமாக இருக்கிறது.

பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே கரோனாவுக்கு காரணமான கோவிட் -19 வைரஸ் மரபணு மாற்ற பரிசோதனையின் தவறான விளைவுகளால் உருவானது என்ற வதந்திகள் இருந்து வருகிறன. இதுபோன்ற வதந்திகளுக்கு ஆதாரம் இல்லை என்றாலும் அவை, ஆராய்ச்சி செயல்பாடுகளின் அறநெறி ஆதாயத்தின் மீதான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளன.

ஆதாய செயல்பாடு ஆராய்ச்சிகள் டிஎன்ஏ-வை திருத்தும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வைரஸ்களின் நோய்களை உண்டாக்கும் தன்மையை கூட்டுவது உள்பட உயிரினங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மாற்றியமைக்கின்றன.

விஞ்ஞானிகள் தற்போதுள்ள வைரஸ்களின் உருமாறும் சாத்தியங்களை தெரிந்து கொள்வதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் இதனைச் செய்கின்றனர். அது அவற்றின் தீங்கு விளைவிக்கும் திறனை அதிகரிக்கின்றது. இதுபோன்ற ஆய்வுகளால் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ இந்த ஆபத்தான வைரஸ்களை ஆய்வகத்திற்கு வெளியே பரப்பவிடும் ஆபத்துகளும் நிறையவே இருக்கின்றன.

தொழில்நுட்பங்களும் பொறுப்புகளும்: உயிரியலை பொறியியலாக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிகள், கடந்த 30 ஆண்டுகளாக எவ்வளவு முன்னேறியுள்ளன என்பதை மைக்கேல் கிரிக்டன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவது ஆராய்ச்சிகளின் ஒரு சிறந்த பகுதிதான் என்றாலும் கூட, அது மிகவும் கடினமாக உள்ளது. இருந்தபோதிலும் தொழில்நுட்பங்கள், ஜூராசிக் பார்க், அதனைத் தொடர்ந்து வந்த படங்களில் உள்ளதை விட கணிசமாக அதிகமாக உள்ளன.

ஆனால், நம் முன் உள்ள பொறுப்பை நாம் எவ்வாறு அறிந்து வைத்திருக்கிறோம்?

அதிர்ஷ்டவசமாக, மரபணு திருத்தத்தின் அறிவியல் வளர்ச்சியுடன், சமூக மற்றும் அறநெறி பக்கங்கள் கைகோத்துள்ளன. கடந்த 1975-ல் விஞ்ஞானிகள், வளர்ந்து வரும் மறுசீரமைப்பு டிஎன்ஏ ஆராய்ச்சிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உறுதி செய்வதற்கான அணுகுமுறையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்தே அறநெறி, சட்டம், அறிவியலின் சமூக பரிமாணங்கள் அனைத்தும் மனித மரபணு திட்டத்துடன் இணைக்கப்பட்டன. DIY bio சமூகங்கள், பாதுகாப்பு மற்றும் பொறுப்பான மரபணு திருத்த ஆராய்ச்சிக்கு முன்னணியில் இருக்கின்றன. "சின்தட்டிக் பயோலஜி" போட்டிகளுக்கு சமூக பொறுப்பு இன்றியமையாதது.


படம் சொல்லும் பாடம்: இதற்கிடையில், மரபணு திருத்தம் அதிக சக்தி வாய்ந்ததாகவும் எளிதில் அணுகக் கூடியதாகவும் மாறி வருவதால் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் தங்களின் சமூகப் பொறுப்புணர்வுள்ளவர்களாக அதிகம் இருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் 'ஜுராசிக் பார்க்' படவரிசை எதிர்காலத்தைச் சித்தரிப்பதில் வியக்கதக்க வெற்றி பெறுகின்றன. அதே நரத்தில் மற்றொரு விசயத்தையும் அவை மிகச் சரியாக செய்திருக்கின்றன. அது, தங்களுடைய செயல்களுக்கான விளைவுகளை சிந்திக்கத் தெரியாத விஞ்ஞானிகளிடம் சக்தி வாய்ந்த தொழில்நுட்பங்களை ஒப்படைக்கும்போது அதன் நோக்கம் நல்லதாகவே இருந்தாலும் விளைவுகள் தீமையானதாகவே இருக்கும்.

ஒருவேளை 'ஜூராசிக் வேர்ல்ட்: டொமினியன்" திரைப்படம் சொல்ல வந்த செய்தி இதுவாகக் கூட இருக்கலாம். "மரபணு மாற்றம் மற்றும் பொறியியலில் நாம் வியத்தகு முன்னேற்றம் அடைந்திருந்த போதிலும், சமூகப்பொறுப்புடன் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை செயல்படுத்தவில்லை என்றால் அதன் விளைவுகள் தவறாகிப் போகும்."

இதில் இன்னுமொரு நல்ல விசயம் என்னவென்றால், விஞ்ஞானிகள் மரபணு குறியீட்டை எவ்வாறு மாற்றியமைத்து மறுசீரமைப்பு செய்கிறார்கள் என்பதில் "முடியும்" " என்ன வேண்டும்" என்பதற்கான இடைவெளியை நிரப்புவதற்கு நமக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. ஆனால், 'ஜூராசிக் வோர்ல்: டொமினியன்' திரைப்பட பார்வையாளர்களுக்கு நினைவுட்டுவதைப் போல எதிர்காலம் விரைவில் வர சாத்தியமிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in