

ஒட்டாவா: கனடா நாட்டை சேர்ந்த பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். இளம் வயதிலேயே உலகளவில் மிகவும் பிரபலமானவர். முதலில் யூடியூப் மூலம் தனது பாப் பாடல்களை வெளியிட்டார். அதன்பிறகு பல நிகழ்ச்சிகளை நடத்தி ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இவரது பேபி பாடல் உட்பட ஏராளமான பாடல்கள் ரசிர்களை கவர்ந்தன.
இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நான் அரிய வகை முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். என்னைப் பாருங்கள். என்னுடைய ஒரு கண்ணை சிமிட்ட முடியவில்லை. அதேபோல் ஒரு பக்கத்தில் என்னால் சிரிக்க முடியவில்லை. ஒரு பக்க மூக்கின் துவாரமும் அசைக்க முடியாது. என்னுடைய முகத்தின் ஒரு பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், என்னுடைய உலக இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளேன். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பதற்றத்தில் உள்ளனர். ஆனால், உடல் அளவில் என்னால் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாத நிலை உள்ள போது என்ன செய்ய முடியும்?’’ இவ்வாறு ஜஸ்டின் பீபர் உருக்கமாக பேசியுள்ளார்.
தற்போது முக பக்க வாதத்துக்கு சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். ‘‘தற்போதைக்கு முழு ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. உடல்நலம் சரியான பிறகு நான் எதற்காக பிறந்தேனோ அந்த பணியை செய்வேன்’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த ஜஸ்டின் பீபர் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.