

“நீதிபதிகள் என் வாழ்க்கையை திரும்ப அளித்திருக்கிறார்கள்... உண்மை என்றும் அழியாது” - தீர்ப்புக்குப் பிறகு ஜானி டெப் லத்தின் மொழியில் கூறியவை.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் இருவருக்கும் இடையே நடந்த அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர், பொருளாதார மந்த நிலை இவற்றை எல்லாம் தாண்டி கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்கர்கள் பலரும் இந்த அவதூறு வழக்கைதான் ஆவலாக எதிர்நோக்கி கொண்டிருந்தனர்.
இவ்வழக்கில் ஜானி டெப் - ஆம்பர் ஹேர்ட் என பொதுமக்கள் பிரிந்து தங்களது ஆதரவை அளித்தனர். தினமும் இவ்வழக்கு குறித்த மீம்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. வழக்கு விசாரணையின்போது ஆம்பர் ஹேர்ட் காண்பித்த முகபாவனைகளை ஆராய்ச்சி செய்து பலரும் உளவியலாளர்களாகவும் மாறினர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆம்பருக்கு சாதகமாக இருந்த ஊடகங்களும், சமூக வலைதளங்களும் அவருக்கு முற்றிலும் எதிராக மாறின. உண்மையில் ஆம்பர் ஹேர்ட் சமூக வலைதளங்களில் வில்லனாகவே முன்னிறுத்தப்பட்டார்.
Law & Crime Network யூ- யூடியூப் சேனல் இருவரது தரப்பு வாதத்தை நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது. அமேசான் ப்ரைம் இவ்வழக்கின் வழக்கு விவாதத்தை எபிசோட்களாக வெளியிட்டுள்ளது. வழக்கின் விசாரணை பொழுபோக்கு நிகழ்ச்சியாக மக்களால் பார்க்கப்பட்டது. இவ்வாறு ஜானி டெப் - ஆம்பர் ஹேர்ட் வழக்கு உலகளவில் பேசும்பொருளாகவே மாறியது.
என்ன நடந்தது? - பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். ஜானி டெப் என்று கூறுவதைவிட `ஜாக் ஸ்பேரோ` என்று குறிப்பிட்டால் அனைவருக்கும் நினைவு வந்துவிடும். ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் ஜாக் ஸ்பேரோவாகவே ஜானி டெப் ரசிகர்களால் அறியப்பட்டார். அந்த அளவு ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்துக்கு ஜானி டெப் உயிர் கொடுத்திருந்தார்.
பிரபல அமெரிக்க நடிகையும், மாடலுமான ஆம்பர் ஹேர்ட் - ஜானி டெப் இடையேயான காதல் 2015 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. திருமணமான ஒன்றறை ஆண்டுகளிலே திருமண உறவில் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் ஆம்பர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜானி டெப்பிடம் விவாகரத்து வழங்கப்பட்டு, இழப்பீடாக 7 மில்லியன் டாலரும் வழங்கப்பட்டது.
ஆம்பருக்கு எதிராக மாறிய கட்டுரை: விவகாரத்துக்கு பிறகு ஆம்பர், 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஷிங்டன் போஸ்டில் ஒரு கட்டுரை எழுதுகிறார். உலக அளவில் #metoo இயக்கம் பரவலாக இருந்த காலக்கட்டத்தில்தான் ஆம்பரின் கட்டுரையும் வெளி வந்தது. இதனால் இந்தக் கட்டுரை மிகுந்த கவனம் பெற்றது.
``பாலியல் வன்முறைக்கு எதிராகப் பேசுகிறேன்” என்ற தலைப்பில் ஆம்பர் எழுதிய கட்டுரையில், தான் இளம் வயதில் சந்தித்த பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் பற்றியும், செல்வாக்கும், பணமும், அதிகாரமும் ஒரு ஆணை எவ்வாறு பாதுகாக்கிறது, பெண்கள் பாலியல் வன்முறைகள் குறித்து அதிகம் பேசப்பட வேண்டும் என்பனவற்றை ஆம்பர் ஹேர்ட் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரை ஜானி டெப்புக்கு எதிராக பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் ஹாலிவுட் படங்களிலிருந்து நீக்கப்பட்டார். தன் மீது ஆம்பர் ஹேர்ட் பொய் புகார் தெரிவிக்கிறார் என்று கூறி ஜானி டெப், ஆம்பர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தான் கடந்த மூன்று வாரங்களாக நடந்தது.
ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு: இவ்வழக்கின் விசாரணை ஆரம்பத்திலிருந்தே ஆம்பர் ஹேர்ட்டுக்கு எதிராகத்தான் இருந்தது. மேலும் விசாரணையில் அவரது சில பதில்கள் முன்னுக்குபின் முரணாக இருந்தன. இதனால் ஆம்பர் ஹேர்ட் சமூக வலைதளங்களில் கடுமையாக கேலிக்கு உள்ளானார்.
விசாரணை முடிவில் பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறையில் ஜானி டெப் ஈடுபட்டார் என்பதற்கு ஆம்பரிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்பளித்ததுடன், சுமார் 10 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையை ஆம்பர், ஜானி டெப்புக்கு வழங்கவும், 5 மில்லியன் டாலரை தண்டனை தொகையாக வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இறுதி தீர்ப்பு நிகழ்வில் ஜானி டெப் கலந்து கொள்வில்லை. தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்தது குறித்து, “நீதிபதிகள் என் வாழ்க்கையை மீண்டும் அளித்திருக்கிறார்கள்... உண்மை என்றும் அழியாது. இந்த வழக்கு என் சூழலில் உள்ளவர்களுக்கும் (ஆண், பெண்) அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் நிச்சயம் உதவும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஜானி டெப்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ``ஜானி... ஜானி... ஜானி” என்று குரல் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தீர்ப்பு குறித்து ஆம்பர் ஹேர்ட் கூறும்போது, “இந்த வழக்கில் தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது. இந்த வழக்கின் முடிவு ஒரு அமெரிக்கர் என்ற முறையில் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பேசும் உரிமையை நான் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. இது எனக்கு கூடுதல் வருத்தத்தை அளிக்கிறது.
இந்த தீர்ப்பு ஒரு பின்னடைவு. வெளிப்படையாக பேசும் பெண்களை இம்மாதிரியான தீர்ப்புகள் அவமானப்படுத்துகின்றன என்றும் ஆம்பர் ஹேர்ட் தெரிவித்திருக்கிறார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம்பர் ஹேர்ட் மேல் முறையீடு செய்ய உள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே, மக்களே தீர்ப்பு வழங்கி கொண்டாடப்பட்ட சில வழக்குகள் வரலாற்றில் ஒன்று. அந்தவகையில் ஜானி டெப் தொடர்ந்த இந்த அவதூறு வழக்கும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.