

'ஜாக் ஸ்பாரோ' ஜானி டெப். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' சீரிஸ் படங்களில் 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைச் சேர்த்த ஜானி டெப், 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்தார். 15 மாதங்களில் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.
இதன்பின் 2018-ல் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் ஆம்பர் ஹேர்ட். பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்தக் கட்டுரையில் ஜானியின் பெயரை குறிப்பிடாமல், அவர் சொன்ன விஷயங்கள் ஹாலிவுட் உலகை அதிரவைத்தது. கட்டுரை வெளியானதுமே ஜானியின் ஹாலிவுட் சாம்ராஜ்யம் கட்டம் கட்டப்பட்டது. பல படங்கள் அவரின் கையை விட்டுச் சென்றன. ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படம் மட்டுமல்ல, ஜானியை 'ஜாக் ஸ்பாரோ'வாக உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்திலிருந்தும் ஜானி நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின் கடந்த 2018ல் ஜானி டெப், ஆம்பர் மீது கட்டுரைக்கு குற்றம்சாட்டி அவதூறாக ரூ.380 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார். தனது சினிமா வாழ்க்கையை ஆம்பர் சிதைத்து வருவதாக ஜானி தொடர்ந்த வழக்குதான் ஹாலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. அவதூறு வழக்கு மூன்று ஆண்டுகள் முன்பு தொடங்கினாலும், கடந்த சில நாட்களாக வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
"ஆம்பர் சொல்வது அனைத்துமே பொய். திருமணத்துக்குப் பிறகு ஆம்பரின் குணம் மாறியது. எல்லாவற்றையும் தவறாகப் புரிந்துகொண்டார். என்னை அவமானப்படுத்தி, உடல் ரீதியாக தாக்கினார். ஒருமுறை இரண்டு பாட்டில்களைக் கொண்டு எறிந்ததில் எலும்பு வெளியே தெரியும் அளவு என் விரல் காயம்பட்டது" என்று ஜானி டெப்பும், "சினிமாவைத் தாண்டி ஜானி எவ்வளவு மோசமானவர் என்பதை இந்த வழக்கு முடியும்போது புரிந்துகொள்வீர்கள். அவருடன் ஆஸ்திரேலியா சென்றபோது எனது பிறப்புறுப்பில் மதுபாட்டில் கொண்டு பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த நபர் அவர். பாலியல் அரக்கன் போல் ஆஸ்திரேலியாவில் இருந்த மூன்று நாட்களும் இருந்தார். போதை இல்லாமல் அவரால் இருக்கவே முடியாது" என்று ஆம்பரும் விசாரணையில் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த வழக்கில் தற்போது என்ன நடக்கிறது?
நேற்று இந்த வழக்கில் ஆம்பர் ஹேர்ட், தனது சாட்சியத்தை அளித்தார். சாட்சியத்தில் ஆம்பர் சொன்ன ஒவ்வொரு குற்றச்சாட்டும் அதிர்ச்சி ரகம்.
"திருமண வாழ்க்கை மிகச் சில வாரங்களே எனக்கு அன்பானதாக இருந்தது. நாளடைவில், அது மிக மோசமானதாக மாறியது. ஒவ்வொரு நாளும் பதற்றமும் வன்முறையும் நிறைந்ததாக இருந்தது. எங்கள் தேனிலவு பயணத்திலேயே என்னை ஜானி தாக்கினார். அன்று என்னை கொன்றுவிடுவார் என்றே பயந்தேன். ஜானி மது அருந்தும் போது அரக்கனாக மாறிவிடுவார். அவரின் போதைப்பொருள் பழக்கத்தை குறைக்க நான் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.
எங்களுக்குள் சண்டை வரும்போது சில சமயங்களில் தன்னைத்தானே ஜானி தாக்கிக்கொள்வார். கையை வெட்டிக்கொள்வார், கத்தியை மார்பில் வைத்து தன்னைத் தானே குத்திக்கொள்வார். ஜானியுடன் மீண்டும் மீண்டும் சண்டை, உடல் ரீதியான துஷ்பிரயோகம் எனக்கு நிகழ்ந்தாலும், உண்மையில் அவரை விட்டு விலக நினைக்கவில்லை. ஏனென்றால், அவரை நான் நிறைய நேசித்தேன். ஆனால், ஒருகட்டத்தில் விலகவில்லை என்றால் எனது உயிருக்கு ஆபத்து என்ற நிலை வரும்போதே விவாகரத்துக்கு விண்ணப்பித்தேன்.
இது கடினமான முடிவாகத் தான் இருந்தது. இந்த முடிவை எடுக்கவில்லை என்றால் உயிர் பிழைக்க முடியாது என்று பயந்தேன். அதன்பிறகே விவாகரத்து முடிவுக்கு சென்றேன்" என்று ஆம்பர் ஹேர்ட் கண்ணீருடன் தனது தரப்பு சாட்சியத்தை நீதிமன்றத்தில் அளித்தார்.