

'ஜாக் ஸ்பாரோ' ஜானி டெப்... உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' சீரிஸ் படங்களில் 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் ஒன்று. உலகம் முழுவதும் ரசிகர்களைச் சேர்த்த ஜானி டெப்பின் தனிப்பட்ட பெயரை சிதைக்கும் விதமாக தற்போது நடந்து வரும் சம்பவங்கள் அமைந்து வருகின்றன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாச கதாப்பாத்திர தேர்வுக்காக கொண்டாடப்பட்ட அவர், கடந்த மூன்று வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் நீதிமன்ற படியேறி வருகிறார்.
எல்லாம் அவரின் இரண்டாவது மனைவியால் நிகழ்ந்தவை. 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் கரம்பிடித்தார். 15 மாதங்களில் இருவரின் காதலும் கசந்துபோக பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர். அமைதியான பிரிவாகத்தான் இருவருக்கும் இடையே இருந்தது. இல்லை... இருந்ததுபோல் தெரிந்தது. 2018-ல் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் ஆம்பர் ஹேர்ட். பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்தக் கட்டுரைதான் இந்த மூன்று ஆண்டு கால ஜானி டெப்பின் சரிவுக்கு ஆரம்பப் புள்ளி.
அந்தக் கட்டுரையில் ஜானியின் பெயர் ஒருமுறை கூட பதிவாகவில்லை. ஆனால், ஆம்பர் அதில் சொன்ன விஷயங்கள் அனைத்தும் அவரை மறைமுகமாக சாடுவதாகவே எல்லோரும் எண்ணினர். கட்டுரை வெளியானதுமே ஜானியின் ஹாலிவுட் சாம்ராஜ்யம் கட்டம் கட்டப்பட்டது. ஹாலிவுட் இண்டஸ்ட்ரியில் ஒரு பழக்கம் உண்டு. பொதுவாழ்க்கையில் ஒரு நடிகரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் அவரை அப்படியே புறந்தள்ளுவார்கள். மிகப்பெரிய ஜாம்பவானாக 30 வருடங்கள் ஹாலிவுட்டில் தனது கோட்டையை கட்டியிருந்தார் ஜானி. அதை ஒரே ஒரு கட்டுரையில் சரித்தார் முன்னாள் மனைவி ஆம்பர்.
'ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படம் மட்டுமல்ல, ஜானியை 'ஜாக் ஸ்பாரோ'வாக உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்திலிருந்தே நீக்கினர். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என தனது பெயரைக் குறிப்பிடாத கட்டுரையைக் கொண்டு நீதிமன்ற படியேறினார் ஜானி.
"ஹாலிவுட்டில் இந்த இடத்தைப் பிடிக்க 30 வருட கால உழைப்பை கொடுத்துள்ளேன். ஆம்பர், ஒரு பொய்க் கட்டுரையால் எனது 30 வருட கால உழைப்பை ஒரு நொடியில் தகர்த்துவிட்டார். பொய்களால் என்னை வில்லனாக சித்தரிக்க முயற்சிப்பதே ஆம்பரின் ஆசையாக உள்ளது. அவரால் ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' வாய்ப்பு இழந்து நிற்கிறேன். அந்தப் படம் எனது மனதுக்கு நெருக்கமான ஒன்று. அதன் 'ஜாக் ஸ்பாரோ' பாத்திரத்துக்காக கொடுத்த உழைப்பு அளப்பரியது. இவை எல்லாம் இப்போது கையைவிட்டு சென்றுவிட்டன.
ஆம்பர் சொல்வது அனைத்துமே பொய். திருமணத்துக்குப் பிறகு ஆம்பரின் குணம் மாறியது. எல்லாவற்றையும் தவறாகப் புரிந்துகொண்டார். என்னை அவமானப்படுத்தி, உடல் ரீதியாக தாக்கினார். ஒருமுறை இரண்டு பாட்டில்களைக் கொண்டு எறிந்ததில் எலும்பு வெளியே தெரியும் அளவு என் விரல் காயம்பட்டது. அப்போது அதை வெளிக்காட்டவில்லை" என ஜானி டெப், ஆம்பர் மீது குற்றச்சாட்டை அடுக்கி, அவதூறாக ரூ.380 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார்.
ஆம்பரோ, ''சினிமாவைத் தாண்டி ஜானி எவ்வளவு மோசமானவர் என்பதை இந்த வழக்கு முடியும்போது புரிந்துகொள்வீர்கள். அவருடன் ஆஸ்திரேலியா சென்றபோது எனது பிறப்புறுப்பில் மதுபாட்டில் கொண்டு பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த நபர் அவர். பாலியல் அரக்கன் போல் ஆஸ்திரேலியாவில் இருந்த மூன்று நாட்களும் இருந்தார். போதை இல்லாமல் அவரால் இருக்கவே முடியாது. அவரின் தொந்தரவுகள் பிடிக்காமலே விவாகரத்து முடிவுக்கே வந்தேன். என்னை நிம்மதியாக வாழவிடக் கூடாது என்பதற்காகவே வழக்கு தொடுத்துள்ளார். எனவே, அவரிடம் இருந்து எனக்கு ரூ.750 கோடி நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும்" என அமெரிக்கா உற்றுநோக்கும் அளவு ஜானி மீது குற்றச்சாட்டை சுமத்தியவர், ஆஸ்திரேலியாவில் தான் சந்தித்ததாகச் சொல்லும் கொடுமைகளுக்கு சிகிச்சை ஆதாரங்களையும் தாக்கல் செய்தார்.
அவதூறு வழக்கு மூன்று ஆண்டுகள் முன்பு தொடங்கினாலும், கடந்த சில நாட்களாக வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைமீது தான் ஒட்டுமொத்த ஹாலிவுட்டின் கண்ணும் உள்ளன. அழுகை, சண்டை, வாதம், பிரதிவாதம் என நீதிமன்றத்தில் வெளிப்படும் நிகழ்வுகள் மூன்று நாட்களாக அமெரிக்காவில் பேசுபொருளாக மாறியுள்ளது. லட்சக்கணக்கானோர் இவர்களின் நீதிமன்ற வாதங்களை தினமும் நேரலையில் பார்ப்பதே அதற்கான சாட்சி.
ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் காதல் திரைப்படம் 1944-ஆம் ஆண்டு வெளியான "டு ஹேவ் அண்ட் ஹேவ் நாட்". இப்படத்தில் நாயகியின் புணை பெயர், ''ஸ்லிம்''. இந்தப் பெயரை புனைப்பெயராக கொண்டு ஆம்பரை அழைத்து காதலில் திளைத்த ஜானி, இன்று அதே காதலியின் குற்றச்சாட்டுகளால் தனது சாம்ராஜ்யத்தை இழந்து நிற்கிறார்.