

சமூக வலைதளங்களில் பிரபலமான ஸ்பைடர்மேன் மீமை 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படக்குழு மீளுருவாக்கம் செய்துள்ளது.
'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி உலக அளவில் வெளியானது. ஸ்பைடர்மேன் முந்தைய பாகங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கரோனா காலத்தில் 1 மில்லியன் டாலர் வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டு அதிக அளவில் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையையும் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' திரைப்படம் பெற்றுள்ளது.
இப்படத்தில் பழைய ஸ்பைடர்மேன்களான டோபி மேக்யுர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ஆகியோரையும் மார்வெல் நிறுவனம் இடம்பெறச் செய்திருந்தது. மேலும் பழைய ஸ்பைடர்மேன் வில்லன்களான டாக்டர் ஆக்டோபஸ், க்ரீன் காப்ளின், சாண்ட்மேன், எலெக்ட்ரோ உள்ளிட்டோரும் இதில் தோன்றியிருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமூக வலைதளங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிய காலம் தொட்டே மூன்று ஸ்பைடர்மேன்கள் ஒருவரை நோக்கி ஒருவர் கைகாட்டும் கார்ட்டூன் மீம் ஒன்று பிரபலம். உலகம் முழுவதும் பலரும் அந்த மீமை பயன்படுத்தி வருகின்றனர். 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்திலும் அது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் அந்த மீமை மீளுருவாக்கம் செய்யும் வகையில் டோபி மேக்யுர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகிய மூன்று ஸ்பைடர்மேன்களும் ஒருவரை நோக்கி ஒருவர் கைகாட்டும் ஒரு புகைப்படத்தை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை முன்னிட்டு இந்த புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ வரும் மார்ச் 22ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.