

மார்வெல் படங்களில் இடம்பெறும் மல்ட்டிவெர்ஸ் பாணியில் புதிய பேட்வெர்ஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக இயக்குநர் மேட் ரீவ்ஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
'டார்க் நைட்', 'டார்க் நைட் ரிட்டர்ன்ஸ்' படங்களுக்குப் பிறகு ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆஃப்லெக் பேட்மேனாக நடிக்க, 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்கள் வெளியாயின. தற்போது ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க, மேட் ரீவ்ஸ், 'தி பேட்மேன்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் மார்ச் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்துக்குப் பிறகு ராபர்ட் பேட்டின்சனே பேட்மேனாக தொடர்வாரா அல்லது வேறு நடிகர் நடிக்கவுள்ளாரா என்பது டிசி ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக இருந்து வந்தது. இது தொடர்பாக டிசி தரப்பில் எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், மார்வெல் படங்களில் சமீபமாக இடம்பெறும் மல்ட்டிவெர்ஸ் பாணியில் பேட்வெர்ஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக இயக்குநர் மேட் ரீவ்ஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் அவர், “இந்த பேட்மேன் படத்தின் மூலம் ஒரு புதிய பேட்வெர்ஸை நான் உருவாக்க விரும்பினேன். நாம் வெறுமனே ஒரு படத்தை எடுத்துவிட்டு சென்று விட முடியாது. இது முதல் அத்தியாயமாக இருந்தாலும், இரண்டாம் பாகம் எடுக்க முடியாத சூழல் கூட உருவாகலாம். எனவே இந்த கதை அதன் வழியில் தனித்து நிற்க வேண்டும். கோதம் நகரத்தின் கதை எப்போதும் முடிவதில்லை” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ‘தி பேட்மேன்’ படத்தின் மூலம் புதிய பேட்வெர்ஸ் ஒன்று உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது.