ஆறு தசாப்தங்களாக ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெறும் ஸ்பீல்பெர்க்

ஆறு தசாப்தங்களாக ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெறும் ஸ்பீல்பெர்க்
Updated on
1 min read

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ‘ஜூராசிக் பார்க்’, ‘ஜாஸ்’, ‘இண்டியானா ஜோன்ஸ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை ஈர்த்தவர். இரண்டு முறை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர். 1961ஆம் ஆண்டு வெளியான ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ என்ற இசை ஆல்பத்தை ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக்கியிருந்தார் ஸ்பீல்பெர்க். இப்படம் கடந்த டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நேற்று (பிப்.08) வெளியான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களாக ஆஸ்கர் பரிந்துரையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்கள் இடம்பிடித்து வருகின்றன.

1977ஆம் ஆண்டு வெளியான ‘க்ளோஸ் என்கவுன்ட்டர்ஸ் ஆஃப் தி தேர்ட் கைண்ட்’ படம் ஆஸ்கர் விருதுக்கு 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு அதில் இரண்டு விருதுகளை வென்றது.

1981ஆம் ஆண்டு வெளியான ‘ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’ திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு 5 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது.

1982ஆம் ஆண்டு வெளியான ‘இ.டி’ திரைப்படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

1993ஆம் ஆண்டு வெளியான ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படம் ஆஸ்கர் விருதுக்கான 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு அதில் 7 விருதுகளை குவித்தது.

1998ஆம் ஆண்டு வெளியான ‘சேவிங் ப்ரைவேட் ரயான்’ படம் 11 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் 5 விருதுகளை வென்றது.

2005ஆம் ஆண்டு வெளியான ‘மியூனிக்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான 5 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இப்படம் எந்த விருதையும் வெல்லவில்லை.

2013ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கன்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு ஒரே விருதை மட்டுமே வென்றது.

தற்போது 2022ஆம் ஆண்டு ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ 7 விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம் கடந்த ஆறு தசாப்தங்களாக ஸ்பீல்பெர்க்கின் படங்கள் தொடர்ந்து ஆஸ்கர் விருதுப் பரிந்துரையில் இடம்பிடித்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in