முதல் பார்வை: 'தி மேட்ரிக்ஸ்: ரெசரெக்‌ஷன்ஸ்' - ஓர் உடைக்கப்பட்ட காஸ்ட்லி ஃபர்னிச்சர்!

முதல் பார்வை: 'தி மேட்ரிக்ஸ்: ரெசரெக்‌ஷன்ஸ்' - ஓர் உடைக்கப்பட்ட காஸ்ட்லி ஃபர்னிச்சர்!
Updated on
3 min read

டைம் ஃப்ரீஸ் சண்டைக் காட்சிகள், மனிதர்கள் vs இயந்திரங்கள் யுத்தம் என சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படங்களின் முன்னோடியாக கருதப்படும் ‘தி மேட்ரிக்ஸ்’ பட வரிசையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் ‘தி மேட்ரிக்ஸ்: ரெசரெக்‌ஷன்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - இதோ முதல் பார்வை...

உலகின் மிகப் பிரபலமான கேம் வடிவமைப்பாளராக இருக்கிறார் தாமஸ் ஆண்டர்சன் / நியோ (கேயானு ரீவ்ஸ்). ஆனால் முந்தைய பாகங்களைப் போலல்லாமல் இதில் வயதான, பலவீனமான நபராக இருக்கிறார். அவ்வப்போது அவருக்கு முந்தைய பாகங்களின் காட்சித் துணுக்குகள், மனிதர்கள் கண்முன்னே வந்து செல்கின்றன. ஆனால், அவை என்ன என்று அவருக்கு புரிவதில்லை. முந்தைய பாகங்களில் நடந்த அனைத்து சம்பவங்களும், சந்தித்த மனிதர்களும் தனது கற்பனையே என்று அவரது மூளையில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. அவற்றைக் கொண்டு ஒரு ‘மேட்ரிக்ஸ் ட்ரையாலஜி’ கேமையும் உருவாக்கியிருக்கிறார். ஒரு காபி ஷாப்பில் தன்னுடைய பழைய காதலியான ட்ரினிட்டியை நியோ சந்திக்கிறார். ஆனால் ட்ரினிட்டி தனது பெயர் டிஃபானி என்று சொல்கிறார். இருவருக்குமே ஒருவரை ஒருவர் அடையாளம் தெரியவில்லை. ஆனால் இருவருமே தங்களுக்கிடையே ஏதோ ஒரு பிணைப்பு இருப்பதாக உணர்கின்றனர்.

இன்னொரு பக்கம் புதிய மார்ஃபியஸ் (யஹ்யா அப்துல் மதீன்) உதவியுடன் பக்ஸ் (ஜெஸிகா ஹென்விக்) உள்ளிட்ட ஒரு குழு பல ஆண்டுகளாக நியோவை தேடி வருகிறது. ஒருவழியாக நியோவைக் கண்டுபிடிக்கும் அவர்கள் உண்மையை வெளிக் கொண்டு வரும் சிவப்பு மாத்திரையைக் கொடுத்து அவரை தற்போது கற்பனை உலகிலிருந்து மீட்கிறார்கள். இந்த கதை நகர்வுகள் அனைத்தும் படத்தில் வெறும் அரை மணி நேரம்தான். இதன் பிறகு என்னவானது என்பதே ‘தி மேட்ரிக்ஸ்: ரெசர்ரக்‌ஷன்’ படத்தின் மொத்தத் திரைக்கதை.

இதற்கு முந்தைய ‘மேட்ரிக்ஸ்’ படங்கள் சயின்ஸ் ஃபிக்‌ஷன், எதிர்காலம், இயந்திரங்கள் ஆகியவற்றையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் மூன்று படங்களின் முக்கிய கருவும் நியோ - ட்ரினிட்டி காதலையே சுற்றி வரும். அதையே இந்தப் படத்திலும் கையாண்டியிருக்கிறார் இயக்குநர் லானா வச்சாவ்ஸ்கி.

1999-ஆம் ஆண்டு வெளியான ‘தி மேட்ரிக்ஸ்’ திரைப்படம், அதன் பின்னால் உலகம் முழுவதும் வந்த பல சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது. அப்படம் ஒரு டெக்னிக்கல் அற்புதம். இன்று வரை ‘மேட்ரிக்ஸ்’ சண்டைக் காட்சிகள் பல படங்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறது. ‘அவதார்’, ‘இன்செப்ஷன்’ போன்ற படங்களில் நாம் பார்த்து ரசித்த பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு வித்திட்ட படம் ‘மேட்ரிக்ஸ்’. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஒரு படத்தின் தொடர்ச்சி 18 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஒரு புதிய அம்சம் கூட இந்த புதிய ‘மேட்ரிக்ஸ்’ இல்லாமல் போனது ஏமாற்றம்.

படம் ஆரம்பித்தது முதல் எந்தவித சுவாரஸ்யமுமின்றி தேமேவென்று நகர்கிறது. முந்தைய படங்களின் பலம் தொழில்நுட்பம்தான் என்றாலும், அவற்றில் ஒரு வலுவான திரைக்கதை இருந்தது. அதுவே, அப்படங்கள் இன்று வரை பேசப்படவும் காரணமாக அமைந்தது. ஆனால், வெறும் தொழில்நுட்பங்களை மட்டுமே நம்பி திரைக்கதையில் எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது இப்படம்.

படத்தின் முதல் பாதியில் ‘நான்காம் பாகம் எடுக்கச் சொல்லி வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் நம்மை மிரட்டுகிறது’ என ஒரு வசனம் வருகிறது. இயக்குநர் தனது மனதில் உள்ளதை அப்படியே வசனமாக வைத்துவிட்டார் போலும். படம் முழுக்க நினைவில் வைத்துக் கொள்ளமுடியாத அளவுக்கு புதிது புதிதாக கதாபாத்திரங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. படத்தில் பிரியங்கா சோப்ராவும் இருக்கிறார். இருக்கிறார் அவ்வளவுதான். மற்றபடி அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக எந்தவேலையும் இல்லை. முந்தைய மூன்று பாகங்களில் தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்லும்படியான பிரபலமான ஆக்‌ஷன் காட்சிகளும், எமோஷனல் தருணங்கள் இருக்கும். அப்படி ஒரு காட்சி கூட இதில் இடம்பெறவில்லை.

படத்தில் பாராட்டும்படியான சில விஷயங்களும் உண்டு. முந்தைய பாகங்களில் இல்லாத ஒரு விஷயம் இந்த படத்தில் அதிகமாக இருந்தது. அது... படம் முழுக்க ஆங்காங்கே தூவப்பட்டுள்ள நகைச்சுவை வசனங்கள். குறிப்பாக ‘மேட்ரிக்ஸ்’ படங்கள் குறித்து கதாபாத்திரங்கள் செய்து கொள்ளும் சுயபகடி. இது தவிர வியக்க வைக்கும் கிராபிக்ஸ், தொழில்நுட்பங்கள், இசை என டெக்னிக்கல் ரீதியான விஷயங்கள் பாராட்டத்தக்கதாக இருந்தாலும் இவை அனைத்தும் பலவீனமாக எழுதப்பட்ட திரைக்கதையால் வலுவிழந்து போகின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஆரவாரம் செய்துகொண்டிருந்த ‘மேட்ரிக்ஸ்’ ரசிகர்கள் பலரும் அடுத்தடுத்த காட்சிகளிலேயே கப்சிப் ஆனதையும் கவனிக்க முடிந்தது.

‘மேட்ரிக்ஸ்’ என்பது ஒரு காஸ்ட்லியான ஃபர்னிச்சர். அந்த ஃபர்னிச்சரை இத்தனை ஆண்டுகாலம் கழித்து தூக்கிப் போட்டு உடைத்திருக்க வேண்டாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in