

சோனி - மார்வெல் கூட்டுத் தயாரிப்பில் ‘ஸ்பைடர்மேன்’ படங்கள் வருமா என்பது குறித்து மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
மார்வெல் - சோனி கூட்டுத் தயாரிப்பில் மூன்றாவது படமாக 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' கடந்த டிச.16 அன்று வெளியானது. மார்வெல் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால் படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இப்படம் இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு முதல் நாளில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹாலிவுட் படமும் இதுவாகும்.
இதன் முந்தைய பாகமான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அதன்பிறகே 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரித்தன. இந்தப் படத்துக்குப் பிறகு சோனி - மார்வெல் கூட்டு தயாரிப்பில் ‘ஸ்பைடர்மேன்’ படங்கள் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்து வந்தது.
இந்நிலையில் ரசிகர்களின் இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவரான கெவின் ஃபீஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
''நானும் டிஸ்னியும் இதுகுறித்துப் பேசிவருகிறோம். ஆம், அடுத்து கதை எதை நோக்கிச் செல்லும் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2019ஆம் ஆண்டு நடந்த பிரச்சினை இந்த முறை நடந்துவிடக் கூடாது''.
இவ்வாறு ஃபீஜ் கூறியுள்ளார்.