Published : 03 Sep 2021 12:32 pm

Updated : 03 Sep 2021 12:32 pm

 

Published : 03 Sep 2021 12:32 PM
Last Updated : 03 Sep 2021 12:32 PM

முதல் பார்வை - ப்ளாக் விடோ

black-widow-review

1995ஆம் ஆண்டு ரஷ்ய உளவாளிகளான அலெக்ஸி மற்றும் மெலினா இருவரும் அமெரிக்காவின் ஓஹியோவில் கணவன் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது இரு மகள்கள் எனக் கூறி நடாஷா ரோமனாஃப் மற்றும் யெலினா பெலோவா என்ற இரு பெண் குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஷீல்ட் நிறுவனத்தில் ரகசியத் திட்டம் ஒன்றைத் திருடிச் சென்று கூபாவில் இருக்கும் வில்லன் ஜெனரல் ட்ரேகாவிடம் ஒப்படைக்கிறார்கள். வில்லன் நடத்தும் ரெட் ரூம் என்ற ஒரு திட்டத்துக்கு வலுக்கட்டாயமாக நடாஷா மற்றும் யெலினா இருவரும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தை வெடிகுண்டால் தகர்த்துவிட்டு வில்லனின் மகளைக் கொன்று அங்கிருந்து தப்பித்து ஷீல்ட் நிறுவனத்தில் இணைகிறார் நடாஷா.

இதன் பிறகு பல வருடங்கள் கழித்து அயர்ன்மேன் குழுவுடன் ஏற்பட்ட விரோதத்தால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து நடாஷா தனது தங்கையைத் தேடிச் செல்கிறார். அவரால் தன் தங்கையைக் கண்டுபிடிக்க முடிந்ததா? வில்லனின் ரெட் ரூம் திட்டம் என்றால் என்ன? நடாஷாவின் வளர்ப்புப் பெற்றோருக்கு என்னவானது? எனபதற்குப் படத்தின் திரைக்கதை விடை சொல்கிறது.

‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்துக்கும் ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படத்துக்கும் இடையில் நடக்கும் கதை. ப்ளாக் விடோவுக்கென் தனித் திரைப்படம் என்ற மார்வெல் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை இப்படம் பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ப்ளாக் விடோவின் கடந்த காலத்தைக் கையில் எடுத்த இயக்குநர் கேட் ஷார்ட்லேன்ட் அதைக் காட்சிப்படுத்திவதில் கோட்டை விட்டுள்ளார். மார்வெல் படங்களின் பலமே அலுப்பைக் கொடுக்காத திரைக்கதையும், நகைச்சுவை வசனங்களும்தான். அவை இரண்டுமே இப்படத்தில் மிஸ்ஸிங். நகைச்சுவை என்ற பெயரில் ஆங்காங்கே முயற்சி செய்திருப்பவை சிரிப்புக்கு பதில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன.

காமிக்ஸைப் படமாக்குவதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் படத்தில் இருக்கும் பிரதான கதாபாத்திரங்களின் பின்னணி ரசிகர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். ஆனால், அதற்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான வகையில் அமைக்கப்படும் சுவாரஸ்யமான திரைக்கதைகளே மார்வெல் படங்களின் வெற்றியாக இருந்துவந்தது. உதாரணமாக நடாஷாவின் தங்கை எலினா பற்றி பெரும்பாலான மார்வெல் ரசிகர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்துதான் வில்லனை எதிர்த்து, சண்டையிடப் போகிறார்கள் என்பதும் ட்ரெய்லரிலேயே தெரிந்துவிட்டது. பின்னர் எதற்காக அவர்கள் இருவருக்கும் இத்தனை சண்டைக் காட்சிகள். முடிவு இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துவிட்டதால் அந்தக் காட்சிகளில் எந்தவித சுவாரஸ்யத்தையும் பார்ப்பவர்களால் உணரமுடிவதில்லை.

நடாஷா / ப்ளாக் விடோவாக ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், இதுவரை வந்த மார்வெல் படங்களில் எப்படி தன்னுடைய பங்கைச் சிறப்பாகச் செய்திருந்தாரோ அதையே இப்படத்திலும் செய்திருக்கிறார். எலினாவாக வரும் ஃப்ளோரஸ் பியூ, ரேச்சல் வெய்ஸ், டேவிட் ஹார்பர் என யாருடைய நடிப்பிலும் குறையில்லை. வழக்கமான மார்வெல் படங்களில் வரும் நேர்த்தியான கிராபிக்ஸ், விறுவிறு ஆக்‌ஷன் காட்சிகள் என அனைத்தும் இருந்தும் மெனக்கெடல் இல்லாத தட்டையான திரைக்கதையால் படம் பல இடங்களில் நெளிய வைக்கிறது.

படத்தின் வெகுசில சுவாரஸ்யமான விஷயங்களில் ஒன்று வில்லனின் அடியாளாக வரும் டாஸ்க்மாஸ்டர். அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு ரசிக்கும்படி இருந்தது. அடுத்து எலினா கதாபாத்திரம். இனி வரக்கூடிய மார்வெல் படங்களில் எலினா பாத்திரம் பிரதானமாக இருக்கும் என்று படத்தின் முடிவில் சொல்லப்பட்டிருப்பது மார்வெல் ரசிகர்களுக்கு ஆறுதல்.

‘அயர்ன்மேன் 2’ (2010) தொடங்கி ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ (2019) வரை மார்வெல் படங்களின் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ப்ளாக் விடோ கதாபாத்திரத்துக்கு இப்படம் ஒரு மோசமான வழியனுப்புதலாக அமைந்துவிட்டது சோகம்.


தவறவிடாதீர்!


Black Widow reviewBlack Widowப்ளாக் விடோமுதல் பார்வைNatasha RomanoffAvengersScarlett JohanssonFlorence PughDavid HarbourO-T FagbenleOlga KurylenkoWilliam HurtRay Winstone

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x