

நடிகர் டேனியல் க்ரெய்க் கடைசியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'நோ டைம் டு டை' திரைப்படம் இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் செப்டம்பர் 30 அன்று வெளியாகிறது.
இந்த அறிவிப்பை யூனிவர்ஸல் பிக்சர்ஸ் புதன்கிழமை அன்று வெளியிட்டது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதோ அங்கு மட்டும் இந்த மாதம் 30 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ளது. ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, போஜ்புரி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
007 படத்தின் அதிகாரப்பூர்வ விட்டர் பக்கத்தில் படத்தின் இறுதி சர்வதேச ட்ரைலர் வடிவமும், படத்தின் வெளியீடு தேதியும் பகிரப்பட்டுள்ளது. "காத்திருப்பு முடிந்தது. நோ டைம் டு டை திரைப்படத்தின் கடைசி சர்வதேச ட்ரெய்லர். செப்ட்ம்பர் 30 முதல் திரையரங்குகளில்" என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் திரைவரிசையில் 25வது படம் இது. டேனியல் க்ரெய்க் ஐந்தாவது முறையாக இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம் கரோனா நெருக்கடியால் தொடர்ந்து பல முறை தள்ளிப்போனது. கடந்த வருடம் நவம்பர், இந்த வருடம் ஏப்ரல் எனத் தொடர்ந்து திட்டமிட்டும் படத்தை வெளியிட முடியவில்லை.
ஒரு வழியாகத் தற்போது இந்த மாத இறுதியில் வெளியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. கேரி ஜோஜி ஃபுகுநாகா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரமி மாலெக் வில்லனாக நடிக்கிறார்.