

'ஆக்வாமேன் 2' படத்துக்காக எட்டு வாரங்களாகத் தான் உடற்பயிற்சி செய்து வருவதாகவும், முதல் படத்தை விட இது இன்னும் பிரம்மாண்டமானதாக, சிறப்பாக இருக்கும் என்றும் நடிகர் பேட்ரிக் வில்ஸன் கூறியுள்ளார்.
டிசி சூப்பர்ஹீரோ திரைப்பட வரிசையில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆக்வாமேன்'. டிசி காமிக்ஸ் உலகை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. நாயகன் ஜேஸன் மோமோவுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. சூப்பர் ஹீரோ படமாக இருந்ததோடு, கடலில் மனிதர்கள் செய்யும் மாசு பற்றியும் இந்தப் படம் பேசியது.
'ஸா', 'இன்ஸிடியஸ்', 'கான்ஜூரிங்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் வான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இரண்டாம் பாகத்தையும் ஜேம்ஸ் வான் இயக்குகிறார். கடல் உலகில் இன்னும் பார்க்கப்படாத பல விஷயங்களை, புதிய உலகைக் காட்டுவேன் என ஜேம்ஸ் வான் கூறியுள்ளார். டிசம்பர் 2022-ம் ஆண்டு 'ஆக்வாமேன் 2' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பேட்ரிக் வில்ஸன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜேம்ஸ் வான் இயக்கத்தில் இவர் முன்னரே 'கான்ஜுரிங்', 'இன்ஸிடியஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் 'ஆக்வாமேன் 2' பற்றி ஒரு பேட்டியில் வில்ஸன் பேசியுள்ளார்.
"ஜேம்ஸைப் பொறுத்தவரை அவர் இரண்டாம் பாகம் எடுக்கும்போது அது இன்னும் பிரம்மாண்டமானதாக, சிறப்பாக இருக்கும். 'ஆக்வாமேன் 2'வும் அப்படி இருக்கும், நிறைய ஆக்ஷன், நகைச்சுவை, பாத்திர வடிவமைப்பைப் பார்ப்பீர்கள். நான் இந்தப் படத்துக்காக எட்டு வாரங்களாகப் பயிற்சி செய்து வருகிறேன். இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தின் திரைக்கதையை நாயகன் ஜேஸன் மோமோவும் இணைந்து எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.