'தோர்' நான்காம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது: இன்ஸ்டாகிராமில் நாயகன் தகவல்

'தோர்' நான்காம் பாகம் படப்பிடிப்பு முடிந்தது: இன்ஸ்டாகிராமில் நாயகன் தகவல்
Updated on
1 min read

சூப்பர்ஹீரோ திரைப்படமான தோரின் 4வது பாகம், 'தோர்: லவ் அண்ட் அண்ட் தண்டர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

2008-ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்துடன் மார்வல் சூப்பர் ஹீரோக்களின் மார்வல் சினிமா உலகம் என்று சொல்லப்படும் திரைப்பட வரிசை ஆரம்பமானது. தொடர்ந்து 'ஹல்க்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு அந்தக் கதாபாத்திரங்கள் வாழும் உலகம் எனத் தனியாகச் சித்தரிக்கப்பட்டது.

மூன்று கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இதில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படமே இந்த வரிசையில் கடைசி. இந்தப் படம் உலகத் திரை வரலாற்றில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.

தற்போது மார்வல் சினிமா உலகின் நான்காவது கட்டத்தில் வெளியாகவுள்ள படங்களின் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் 'தோர்' படத்தின் நான்காவது பாகமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக, படத்தின் நாயகன் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

டைகா வைடிடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கும் ஹெம்ஸ்வொர்த், "தோர் லவ் அண்ட் தண்ட்ர் முடிந்தது. மேலும் இன்று உடம்பை அதிகம் முறுக்க வேண்டாம் என்பதால் இந்த அமைதியான புகைப்படம் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் பயங்கர நகைச்சுவையாகவும், அதே சமயம் கொஞ்சம் நெகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்" என்று குறிப்பிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வைடிடியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு நிறைவானது குறித்து பகிர்ந்துள்ளார்.

"உலகிற்கு உந்துதுலைத் தர, சினிமாவின் தன்மையை மொத்தமாக மாற்ற சில நேரங்களில் இருவர் ஒன்று சேர்வார்கள். சில நேரங்களில், இதோ என்னையும், ஹெம்ஸ்வொர்த்தையும் போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் மக்களின் சந்தோஷத்துக்காக மட்டும் திரைப்படங்கள் எடுப்போம். மேலும் நான் இந்தப் புகைப்படத்தில் நன்றாக இல்லை என்று எனக்குத் தெரியும்" என்று வைடிடி குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரெலியாவில் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட வேலைகள் தொடங்கியுள்ளன. அடுத்த வருடம் மே மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் தோர் திரைப்பட வரிசையில் வெளியான 'தோர் ராக்னராக்' திரைப்படத்தையும் டைகா வைடிடி இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in