இயக்குநர் மீது ‘வொண்டர் வுமன்' நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

இயக்குநர் மீது ‘வொண்டர் வுமன்' நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

Published on

2017-ம் ஆண்டு டிசி காமிக்ஸின் 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் வெளியானது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின்போது இயக்குநர் ஸாக் ஸ்னைடரின் மகள் தற்கொலை செய்து கொண்டதால் அவரால் படத்தின் வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போனது.

படத்தில் சில கூடுதல் காட்சிகளைச் சேர்க்க, 'அவெஞ்சர்ஸ்' முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜாஸ் வீடன் உதவியை ஸ்னைடர் ஏற்கெனவே நாடியிருந்ததால், வீடனை வைத்துப் படத்தை முடிக்க வைத்தது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.

ஜாஸ் வீடன் மீது ஜஸ்டிஸ் லீக் படத்தில் நடித்த ரே ஃபிஷர், வீடனின் முன்னாள் மனைவியான கை கோல் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் ‘வொண்டர் வுமன்’ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான கால் கேடட் சமீபத்தில் இஸ்ரேலிய பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் ஜாஸ் வீடன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

ஜாஸ் வீடனுடன் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை என்னவென்றால், அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையை குறிப்பிட்டு என்னை மிரட்டினார். நான் ஏதாவது செய்தால் என்னுடைய சினிமா வாழ்க்கையையே முடித்து விடுவேன் என்று என்னிடம் கூறினார். ஆனால் அதை நான் அப்போதே சமாளித்து விட்டேன். அது நடந்த போதே அதை நான் மேலிடங்களுக்கு கொண்டு சென்று விட்டேன்.

இவ்வாறு கால் கேடட் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு ஒருமுறை கால் கேடட் வேறு ஒரு பேட்டியில் ஜாஸ் வீடனுடன் பணிபுரிந்த அனுபவம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in