

‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட்டை நடிக்கவைக்க சோனி நிறுவனத்திடம் சண்டை போட்டதாக ரூஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது 'ஸ்பைடர்மேன்' பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.
கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு ‘ஸபைடர்மேன்: நோ வே ஹோம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் டாம் ஹாலண்ட்டை நடிக்க வைக்க சோனி நிறுவனத்துடன் சண்டை போட்டதாக ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் கூறியுள்ளதாவது:
''மார்வெல் தலைவர் கெவின் ஃபீஜிடம் டாம் ஹாலண்ட் குறித்து நாங்கள் பேசியபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து சோனி நிறுவனத்திடம் பேசுவதற்காகச் சென்றிருந்தோம். ஆனால், அவர்கள் அதுகுறித்து யோசிப்பதாகக் கூறினார்கள். ஆனால், அவர்கள் தெளிவான பதிலைக் கூறவில்லை.
நாங்கள் ஹாலண்ட்டை அங்கு திரும்பத் திரும்ப அழைத்துச் சென்றோம். இறுதியில் அது ஒரு சண்டையாக உருவெடுத்தது. ஆனால் அவர்கள் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள். ஹாலண்ட் போன்ற ஒரு 19 வயது இளைஞனுக்கு அத்தகைய கதாபாத்திரத்தைக் கொடுப்பதற்கு அவர்கள் தயங்கினர்''.
இவ்வாறு ரூஸோ சகோதரர்கள் கூறியுள்ளனர்.