

பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான லேடி காகா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். இவர் பிரெஞ்ச் புல்டாக் இனத்தைச் சேர்ந்த கோஜி மற்றும் குஸ்டவ் ஆகிய 2 நாய்களை வளர்த்து வருகிறார்.
காகாவின் வேலைக்காரர் ரயன் பிஸ்சர் கடந்த புதன்கிழமை இரவு, 2 செல்லப் பிராணிகளையும் நடைபயணமாக அழைத்துச் சென்றுள்ளார். அவ்வழியாக வந்த ஒரு மர்மநபர், வேலைக்காரரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 2 நாய்களுடன் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதில் காயமடைந்த ரயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, படப்பிடிப்புக்காக இத்தாலி சென்றுள்ள லேடி காகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது இதயம் நொறுங்கிவிட்டது. கருணை மனப்பான்மையால் என் குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேர பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் பத்திரமாக வீடு திரும்ப உதவுவோருக்கு ரூ.3.6 கோடி பரிசு வழங்கப்படும்” என பதிவிட்டிருந்தார்.
மேலும், “என் செல்லப் பிராணிகளை விலைக்கு வாங்கியவராக இருந்தாலும், கண்டுபிடித்து தருபவராக இருந்தாலும் இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும். என் குடும்பத்தினருக்காக, உயிரை பணயம் வைத்து போராடிய ரயனுக்கு நன்றி. நீங்கள் எப்போதும் ஹீரோதான்” என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த 2 நாய்களும் பத்திரமாக மீட்கப்பட்டு நடிகை லேடி காகா வீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் தெரிவித் துள்ளனர்.
எனினும், எங்கிருந்து, யார்மூலம் மீட்கப்பட்டது என்ற விவரத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.