

ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ஜார்ஜ் க்ளூனி. ‘ஒஷன்’ஸ் லெவன்’, ‘கிராவிட்டி’, ‘அப் இன் தி ஏர்’, ‘டிஸெண்டன்ட்ஸ்’, ‘பேட்மேன் & ராபின்’ உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். ‘சிரியானா’ என்ற படத்துக்கான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு ஜார்ஜ் க்ளூனி அளித்த பேட்டியில் தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''அரசியலில் எனக்குப் பிடித்த, நான் மிகவும் மதிக்கக்கூடிய பல நண்பர்கள் எனக்கு இருக்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கை மிகவும் கடினமானது. அதில் ஒரு சிறிய தருணத்தைக்கூட நான் விரும்பியதில்லை. அரசியலில் இல்லாமலே பல பயனுள்ள விஷயங்களை என்னால் செய்ய முடியும்.
என்னுடைய குழந்தைகள் மீது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு வாழ்க்கை சில வழிகளில் சுலபமானதாக இருந்தாலும் பல வழிகளில் கடினமானதாக இருக்கிறது. பிரபலங்களின் குழந்தைகள் ஒரு பூதக் கண்ணாடியால் கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதை நினைவூட்டுவது சவாலாக இருக்கப்போகிறது. அவர்களுக்கு இரக்கத்தையும், அவர்களைப் போன்ற சலுகைகள் கிடைக்கப் பெறாத மக்களைப் பற்றியும் புரியவைப்பதில் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது''.
இவ்வாறு ஜார்ஜ் க்ளூனி கூறியுள்ளார்.