மெய்க்காப்பாளரை மணந்தார் நடிகை பமீலா ஆண்டர்சன்

மெய்க்காப்பாளரை மணந்தார் நடிகை பமீலா ஆண்டர்சன்
Updated on
1 min read

ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன், தனது மெய்க்காப்பாளராக இருந்த டேன் ஹேஹர்ஸ்டை மணந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி, கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம், நெருங்கிய நண்பர்கள், சொந்தங்கள் மட்டும் கலந்துகொள்ள, பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கவர் தீவில் இந்தத் திருமணம் நடந்து முடிந்தது.

52 வயதான பமீலாவுக்கு இது ஐந்தாவது திருமணம். இவரது முதல் திருமணம் இசைக் கலைஞர் டாமி லீயுடன் நடந்தது. இவர்களுக்கு ப்ராண்டன் மற்றும் டைலன் என இரண்டு மகன்கள் உள்ளனர். டாமி லீயைச் சந்தித்த 4 நாட்களில் பமீலா திருமணம் செய்துகொண்டது அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தற்போது பமீலா திருமணம் செய்திருக்கும் டேன் ஹேஹர்ஸ்ட், பமீலாவின் ஊரைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வருவதாக ஹாலிவுட் ஊடகமான ஈ நவ் தெரிவித்துள்ளது.

பமீலாவின் மகன்கள் ப்ராண்டன், டைலன் ஆகிய இருவரும் தங்கள் தாயின் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பமீலா இதுவரை சந்தித்ததிலேயே டேன் தான் மிகக் கனிவானவர் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தான் சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாக பமீலா ஆண்டர்சன் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in