மெலனியா ட்ரம்ப்பைக் கிண்டல் செய்த ஜிம் கேரி: நெட்டிசன்கள் விமர்சனம்

மெலனியா ட்ரம்ப்பைக் கிண்டல் செய்த ஜிம் கேரி: நெட்டிசன்கள் விமர்சனம்
Updated on
1 min read

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப்பைக் கிண்டல் செய்து கேலிச்சித்திரம் ஒன்றை நடிகர் ஜிம் கேரி பகிர்ந்துள்ளார். இது ஒரு பக்கம் வரவேற்பையும், பலரிடமிருந்து கண்டனங்களையும் பெற்றுள்ளது.

சமீப காலங்களில் அரசியல் ரீதியாகப் பல கேலிச்சித்திரங்களை ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி பகிர்ந்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சித்தும், அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தில் கலவரம் செய்தவர்களைக் கிண்டல் செய்தும் கருத்து தெரிவித்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை அன்று கேலிச்சித்திரம் ஒன்றை ஜிம் கேரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப்பைக் குறிப்பதாக இருந்தது.

இதில், "ஓ, சென்று வாருங்கள் மோசமான முதல் சீமாட்டி. உங்கள் வாழ்வின் அர்த்தமில்லாத முடிவில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் பணம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். எதுவும் செய்யாமல் இருந்ததற்கு நன்றி" என்ற வார்த்தைகளும் இருந்தன.

இது ஜிம் கேரி எழுதிய வார்த்தைகளாக இல்லையென்றாலும் அவர் இதைப் பகிர்ந்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது. இந்த கேலிச்சித்திரம் பெண்களுக்கு எதிராக இருப்பதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடந்த கலவரத்தையொட்டி டொனால்ட் ட்ரம்ப்பின் கேலிச் சித்திரத்தையும் ஜிம் கேரி பகிர்ந்திருந்தார். அதில் கொலை செய்யும் கோமாளி ட்ரம்ப் என்றும், அவர் மனித உயிர்களை மட்டுமல்ல, உண்மையையும் கொன்று மக்களின் அறியாமையை ஆயுதமாக்குபவர் என்றும் வர்ணிக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in