

கடந்த ஐந்து வருடஙக்ளில் ஹாலிவுட் திரைப்படங்களில் அதிக முதலீடு செய்தவர்களில் ஒருவராக அலிபாபா இணை நிறுவனர் ஜாக் மா உருவெடுத்துள்ளார்.
சீனாவின் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ஜாக் மா. சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் இவர். சமீபத்தில் இவர் காணாமல் போனதாகச் சொல்லப்பட்டாலும், அவர் வெளியில் அதிகம் தலை காட்டாமல் இருக்கிறார் என்றும், காணாமல் போகவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில் திரைத் துறையிலும் ஜாக் மா செய்த முதலீடுகள் குறித்து ஐஏஎன்எஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜாக் மாவின் அலிபாபா நிறுவனத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட அலிபாபா பிக்சர்ஸ், சீன திரைப்படங்களுக்கு விளம்பர ரீதியாக உதவியுள்ளது. மேலும் சீனத் திரைப்படங்களிலும் முதலீடு செய்துள்ளது. முக்கியமாக, 2015ஆம் வருடத்திலிருந்து ஜாக் மா ஹாலிவுட்டிலும் முதலீடு செய்து வருகிறார். 2019ஆம் வருடம் வெளியான '1917' திரைப்படத்திலும் ஜாக் மா முதலீடு செய்திருந்தார்.
3 ஆஸ்கர்களை வென்ற '1917' திரைப்படத்தில் ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்டும், இயக்குநர் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனமும் கூட தயாரிப்பாளர்களாக இருந்தது நினைவுகூரத்தக்கது.
2015ஆம் ஆண்டு வெளியான 'மிஷன் இம்பாஸிபிள் ரோக் நேஷன்' திரைப்படத்திலிருந்து தங்களது ஹாலிவுட் முதலீட்டை அலிபாபா பிக்சர்ஸ் தொடங்கியது. 170 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகளவில் 682.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.
2016ஆம் ஆண்டு பாராமவுண்ட் பிக்சர்ஸின் இரண்டு திரைப்படங்களில் அலிபாபா முதலீடு செய்தது. 'டீனேஜ் ம்யூடண்ட் நின்ஜா டர்டல்ஸ்' மற்றும் 'ஸ்டார் ட்ரெக் பியாண்ட்' என இந்த இரண்டு திரைப்படங்களுமே சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்றது. 2018 ஆம் ஆண்டு மீண்டும் 'மிஷன் இம்பாஸிபிள்' திரைப்பட வரிசையில் முதலீடு செய்தது அலிபாபா. 791 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலுடன், அந்தத் திரை வரிசையிலேயே அதிக வசூலை அந்தப் படம் பெற்றது.
இது தவிர சீன திரைப்பட ஸ்டூடியோவான ஹுவாயி பிரதர்ஸ் மீடியாவுக்கு அலிபாபா பிக்சர்ஸ் குழுமம் 103 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாகக் கொடுத்திருக்கிறது.
"எங்கள் சர்வதேசமயமாக்கலின் முதல் படி தான் 'மிஷன் இம்பாஸிபிள் ரோக் நேஷன்'. இன்னும் பல சர்வதேச திரைப்பட ஸ்டூடியோக்களுடன் இணைந்து பணியாற்ற அலிபாபா பிக்சர்ஸ் ஆர்வத்துடன் உள்ளது.அதன் மூலம் திரைத்துறைக்கான வளங்கள், தொழில்நுட்பங்கள், திறமைகளை ஒருங்கிணைத்து உலகத் தரம் வாய்ந்த ஒரு பொழுதுபோக்குத் தளத்தை உருவாக்க விரும்புகிறோம்" என்று அலிபாபா பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி ஜாங் சென் கூறியுள்ளார்.